
அமுதாவும் அன்னலட்சுமியும்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
மக்கள் மனதில் புதைந்து கிடந்த கேள்வியை சீரியல் வாயிலாக அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் முன்வைப்பதாகவும், பெண்கள் எதிர்பார்க்கும் புரட்சியாக இத்தொடர் உள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வுக்கான காட்சிக்கான புரோமோ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில், அமங்கலியாக பூவும் பொட்டும் இல்லாம முன்ன நின்று தாலி எடுத்துக்கொடுத்தா, எதிர்காலத்தையே பாதிக்கும் என அன்னலட்சுமியை நிகழ்ச்சியில் இருந்தவர்கள் புறக்கணிக்கின்றனர்.
அப்போது குறுக்கே வரும் அமுதா, கணவனை இழந்த தன் மாமியாரை (அன்னலட்சுமியை) அழைத்து வந்து, அவருக்கு பூவும் பொட்டும் வைத்து விடுகிறார். (அன்னலட்சுமி அதிர்ச்சியில் உறைகிறார்) பின்னர் அமுதா பேசும் வசனங்கள்தான் பலரின் மனங்களை கொள்ளைக்கொண்டுள்ளது.
படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்'.. அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்! ஏன் தெரியுமா?
''புருஷன் என்பவன் வெறும் தாலி மட்டும்தான் கட்டுகிறான். அவன் போயிட்டா, அதனால தாலிய கழட்டுறது சரி. ஆனால், பிறந்ததிலிருந்தே வைத்திருக்கும் பூவையும், பொட்டையும் எடுக்க வேண்டும் என நினைப்பது எந்தவகையில் நியாயம்'' என கேள்வி எழுப்புகிறார்.
மனிதி வெளியே வா... என்ற பின்னிசைப் பாடலுடன் வெளியான புரோமோ உணர்ச்சிகரமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது.
இதற்கு பலர் நேர்மறையாக கருத்துகளை கமெண்டுகளாக பதிவிட்டுள்ளனர்.
அதில், அமுதாவின் திருமணத்திற்கு பிறகு தொடர் விறுவிறுப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நாள்கள் காத்திருந்த தருணம் திரையில் உயிர்பெற்றுள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடரை இயக்கும் இயக்குநருக்கு எனது வாழ்த்துகள். அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அடுத்த தலைமுறையினரை நோக்கி சீரியல் நகர்கிறது என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
கணவனை இழந்து ஒற்றைத் தாயிடம் வளரும் குழந்தகளின் விருப்பமே இந்த தொடரின் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.