2022-ல் மக்கள் மனங்களைக் கவர்ந்த சின்னத்திரைத் தொடர்கள்!

2022ஆம் ஆண்டு மக்கள் மனங்களைக் கவரும் வகையில் அறிமுகமான சின்னத் திரை தொடர்கள் ஏராளம். அதேபோன்று பல தொடர்கள் முடிவுக்கும் வந்தன
2022-ல் மக்கள் மனங்களைக் கவர்ந்த சின்னத்திரைத் தொடர்கள்!

2022ஆம் ஆண்டு மக்கள் மனங்களைக் கவரும் வகையில் அறிமுகமான சின்னத் திரை தொடர்கள் ஏராளம். அதேபோன்று பல தொடர்கள் முடிவுக்கும் வந்தன. இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் ஏராளம். அதேபோன்று தொடர் முடிந்ததால் மகிழ்ச்சியடைபவர்களும் இருக்கவே செய்கின்றனர். ரசனையைப் பொறுத்து அவை மாறுபடுகின்றன. 

வெள்ளித் திரையில் அறிமுகமானால்தான் மதிப்பு என்ற காலம் சென்று சின்னத் திரை தொடர்களுக்கும் அதிக அளவிலான ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன. மக்களை அவர்களின் வீடுகளில் நாள்தோறும் சந்திப்பதே இதற்கு காரணம். 

வெள்ளித் திரையில் நடித்தவர்கள் ஓய்வு பெற்று சின்னத் திரைக்கு நடிக்க வந்த காலம் சென்று, சின்னத் திரையில் நடித்து வெள்ளித் திரைக்கு செல்லும் காலத்திற்கு சீரியல்கள் வரவேற்பு பெற்றுள்ளன. 

படங்கள் ரிலீசாகும்போது மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதன்பிறகும் கொண்டாடப்படும் படங்கள் சொற்பம். ஆனால், ஒரு நல்ல சீரியல் என்பது நாள்தோறும் அவர்களிடம் வெவ்வேறு திரைக்கதைகளுடன் சேர்வதால், அதன் மீது உருவாகும் சுவாரஸியம் குறைவதே இல்லை. அப்படி சில தொடர்கள் மக்களிடம் நீங்கா இடம் பிடித்துள்ளன. 

இந்த அங்கீகாரத்துக்கு டிஆர்பி ரேட்டிங் போன்று மக்கள் அளித்துள்ள ரேட்டிங்குக்கும் பங்குள்ளது. அப்படி தனியார் நிறுவனம் சார்பில், 2022ஆம் ஆண்டில் மக்கள் மனம் கவர்ந்த சின்னத்திரை தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

எதிர்நீச்சல்

அதில், அதிக அளவாக எதிர்நீச்சல் தொடருக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொடரை கோலங்கல் தொடரை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். இது சன் என்டர்டெயின்மென்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் சார்பில் இத்தொடர் தயாரிக்கப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இத்தொடர் இயக்கப்பட்டு வருகிறது. வார நாள்களில் இரவு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு குடும்பப் பெண்கள் மட்டுமின்றி, பல இளைஞர்களும் ரசிகர்களாக உள்ளனர். 

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் படித்த பெண், பழமைவாதத்தைப் பின்பற்றும் மாமனார் வீட்டில் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறாள் என்பதையே அடித்தளமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

பழமைவாதம் மற்றும் கால மாற்றத்திற்கு ஏற்ப நவீனத்துவம் இடையேயான வேறுபாடுகளை வசனங்கள் மூலம் வெளிப்படுத்துவதால், அதிக அளவிலான ரசிகர்களை எதிர்நீச்சல் தொடர் கவர்ந்துள்ளது. 

கோலங்கள் தொடரில் ஆர்த்தி கேரக்டரில் நடித்த நடிகை ஸ்ரீவித்யாதான் இந்த தொடருக்கு வசனங்கள் எழுதுகிறார். பெண்களுக்காக சீரியல்களை இயக்குபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே உள்ள நிலையில், பெண் பார்வையில் வசனங்கள் எழுதப்படுவதால், பல பெண்களை எதிர்நீச்சல் தொடர் கவர்ந்துள்ளது. 

திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான வல்லமை தாராயோ என்ற தொடரிலும் ஸ்ரீவித்யா திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

எதிர்நீச்சல் தொடரில் வரும் மாமனார் கதாபாத்திரம் இளசுகளின் மீம்ஸ் டெம்ப்ளேட்டாகவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த அளவுக்கு இளம் தலைமுறையினரையும் 'எதிர்நீச்சல்' தொடர் கவர்ந்துள்ளது.

மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மக்கள் மத்தியில் எதிர்நீச்சல் தொடர் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தாலும், டிஆர்பி ரேட்டிங்கில் கயல் தொடர் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 

கயல்:

சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 'கயல்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 'முந்தானை முடிச்சு', 'மரகத வீணை', 'கேளடி கண்மணி', 'அழகு' போன்ற தொடர்களை இயக்கிய இயக்குநர் பி.செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' ஆகிய தொடர்களில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகநாக நடித்து வருகிறார். 

அப்பாவை இழந்த பெண் தனியொரு நபராக தன் குடும்பத்தை சக உறவினர்கள் கொடுக்கும் பிரச்னைகளை எவ்வாறு கடந்து சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறாள் என்பதை மையமாகக் கொண்டு கயல் தொடர் இயங்கி வருகிறது. 

உறவுகளின் சிக்கல், பாசம், சுயமரியாதை, காதல் ஆகிய பல உணர்வுகளை கடத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு வருவதால், டிவி சீரியல்களில் தொடர்ந்து கயல் முதலிடம் பிடித்து வருகிறது. 

கயல் தொடர் கடந்த ஆண்டு முழுவதுமே அனைத்து வாரங்களிலுமே தொடர்ந்து முதலிடம் பிடித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. டிசம்பர் 2வது வாரம் டிஆர்பி பட்டியலின்படி 11.83 புள்ளிகளுடன் தொடர்ந்து 'கயல்' தொடர் முதலிடத்தில் உள்ளது.

கயல் தொடருக்கு அடுத்தபடியாக சுந்தரி (10.73), வானத்தைப் போல (9.93), பாரதி கண்ணம்மா (9.50), எதிர்நீச்சல் (9.48) ஆகிய தொடர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ரோஜா தொடர், இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.  

ரோஜா

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ரோஜா தொடர் ஒளிபரப்பானது. முழுமையாக நான்கு ஆண்டுகள் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த தொடர்களில் முக்கியமான இடம் 'ரோஜா' தொடருக்கு உண்டு.

பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோர் ரோஜா - அர்ஜுன் என்ற முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். சின்னத்திரையின் இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. ரோஜா - அர்ஜுன்  இடையிலான காதல் காட்சிகள் இளசுகளையும் கவரும் வகையில் இருந்ததால், இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் இந்த தொடர் கவர்ந்திருந்தது. 

சின்னத் திரையில் பல தொடர்கள் தற்போது இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்படுவதால், வழக்கமான அழுகாட்சி திரைக்கதையிலிருந்து ஆரோக்கியமான பாதையை சின்னத் திரை தொடர்களும் முன்னெடுக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com