
மாறுவேடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் அஸ்வின் குமாரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஸ்வின் குமார் கடந்த மாதம் அவரது என்ன சொல்ல போகிறாய் திரைப்பட அறிமுக விழாவில் 40 கதைகளைக் கேட்டு தூங்கியதாக பேச அந்த விடியோ வைரலானது. இயக்குநர்களை அவர் அவமானப்படுத்தும் விதமாக ஆணவமாக பேசிய பெரும் சர்ச்சை உருவானது.
மேலும் அவர் நாயகனாக நடித்த படம் என்ன சொல்ல போகிறாய் வெளியான போது, இந்தக் கதைக்கும் தூங்கியிருக்கலாம் என்பது போன்ற விமர்சனங்களே வந்தன. அவரது பேச்சு படத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை கோவை சரளாவுக்கு முக்கியமான வேடம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் என்ன சொல்ல போகிறாய் நாயகி தேஜு அஸ்வினியுடன் கலந்துகொண்டார்.
இதையும் படிக்க | 'டான்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
அந்த நிகழ்ச்சிக்கு அஸ்வின் குமார், ஒட்டு முடி, ஒட்டு தாடி என மாறுவேடத்தில் சென்று, ரசிகர்களுக்கு அவரது கையாலேயே சமோசா அளித்தார். பின்னர் தனது ஒப்பனையை நீக்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அவருக்கு ஒப்பனை செய்யும் விடியோவின் பின்னணியில் கமல்ஹாசனின் தசாவதாரம் பட உலக நாயகனே பாடலை ஒலிக்கவிட்டு ரசிகர்கள் பகிர்ந்தனர். கமல்ஹாசன், விக்ரமுக்கு அடுத்தபடியாக ஒப்பனையில் கலக்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் அவரை கலாய்க்கும் விதமாக படிக்காதவன் படத்தில் விவேக் பேசும் வசனமான, மாறுவேடத்துக்கு உண்டான மரியாதை போச்சேடா என்பதை மீமாக பகிர்ந்திருந்தனர்.
இதையும் படிக்க | கரோனாவுக்கு பிறகு நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்?: வெளியான புகைப்படம்
மேலும் மாதத்துக்கு ஒரு முறை சமூக வலைதள வாசிகளின் பசிக்கு அவர் இறையாவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் அஸ்வின் குமாரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை வெறுப்பவர்களுக்கு ஆங்கிலத்தில் கருத்து ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் பழிவாங்குவேனா, இல்லை. நான் சோம்பேறி. கர்மா உங்களை பார்த்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை தொடர்கள், சில விளம்பரப் படங்கள் நடித்து வந்த அஸ்வின் குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த புகழின் காரணமாகவே என்ன சொல்ல போகிறாய் படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.