கமலும் ரஜினியும் காலத்தை வென்று நிற்பது எப்படி? விக்ரம் விளாசல்

ஒருபுறம் படத்தின் வெற்றி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொருபுறம் தமிழ்த் திரையுலகிற்கு மேலுமொரு புகழையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது இரண்டாம் விக்ரம்.
கமலும் ரஜினியும் காலத்தை வென்று நிற்பது எப்படி? விக்ரம் விளாசல்

ஒருபுறம் படத்தின் வெற்றி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொருபுறம் தமிழ்த் திரையுலகிற்கு மேலுமொரு புகழையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது இரண்டாம் விக்ரம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவராகிவிட்ட கமல்ஹாசனுக்குக் கடைசியாக - 2018, ஆகஸ்ட் - வெளிவந்த திரைப்படம் விஸ்வரூபம் -2. இதிலும்கூட ஓரளவு முன்னதாகவே (2013 ஜனவரியில் வெளியான விஸ்ரூபம் முதல் பகுதி படப்பிடிப்பின்போதே) எடுக்கப்பட்ட பழைய காட்சிகளே கணிசமான அளவுக்கு இடம் பெற்றிருந்தன. படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இரண்டு விஸ்வரூபங்களுக்கும் இடையே வெளியான உத்தம வில்லன், தூங்காவனம் இரண்டையும் வெற்றிப் படங்களெனக் கூறவியலாது. பாபநாசம் மிகவும் பேசப்பட்ட, ஓரளவு வெற்றியும் பெற்ற படம் என்றாலும் அதன் ஒரிஜினல் மலையாளம்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் நுழைந்த அரசியலிலும் கமல்ஹாசனின் வெற்றி உவப்பானதாக அமையவில்லை, ஏறத்தாழ, சிவாஜி கணேசனுக்கும் பாக்யராஜுக்கும் நேர்ந்ததைப் போலவே, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் லெவல்.

சிக்கலான இப்படியொரு காலகட்டத்தில்தான் - அந்தக் காலத்தில் நாடோடி மன்னன் திரைப்பட வெளியீட்டுக்கு முன் எம்ஜிஆர் சொன்னதைப் போல, வென்றால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி என்ற நிலையில் - முதல் விஸ்வரூபம் வெற்றிபெற்று, 9 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வாரம்  வெளியானது விக்ரம் 2. அரசியல் தலைவராகத் தோற்றபோதிலும் திரைத்துறையில் நடிகராக மீண்டும் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன், விக்ரம் - 2 மூலம்.

1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் கமல்ஹாசன்.

மீசை முளைத்த வயதில் 1973 ஆம் ஆண்டில் அரங்கேற்றத்தில் பாலசந்தர் இயக்கத்தில் சொல்லிக்கொள்ளக் கூடிய கதாபாத்திரத்தில் திரையில் தோன்றுகிறார் கமல்ஹாசன். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சொல்லத்தான் நினைக்கிறேன் (1973), அவள் ஒரு தொடர்கதை (1974), அபூர்வ ராகங்கள் (1975), மன்மத லீலை (1976). எல்லாம் பாலச்சந்தர் இயக்கிய படங்கள். மன்மத லீலையில் முழுப்படத்தையும் சுமக்கிற கதாநாயகனாகிவிடுகிறார்.

1975 ஆம் ஆண்டில் மட்டும் தனித்தோ, மற்றொரு கதாநாயகனுடன் இணைந்தோ 14 படங்கள் வெளிவந்தன.- சினிமா பைத்தியம், பட்டாம் பூச்சி, ஆயிரத்தில் ஒருத்தி, தேன் சிந்துதே வானம், மேல்நாட்டு மருமகள், தங்கத்திலே வைரம், பட்டிக்காட்டு ராஜா, ஞான் நின்னே பிரேமிக்குன்னு, மாலை சூடவா, அபூர்வ ராகங்கள், திருவோணம், மாட்டொரு சீதா, ராஸலீலா, அந்தரங்கம்!

1975-ல் வெளியான பாலசந்தரின் அபூர்வ ராகங்களில்தான் ஒரு துண்டான - ஆனால், கனமான - பாத்திரத்தில் அறிமுகமாகிறார் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் அடுத்த தமிழ்ப் படம், அடுத்த ஆண்டு, 1976-ல் வெளிவந்த மூன்று முடிச்சு. இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் பாத்திரத்தை பிரதானமாக மாற்றிவிடுகிறார் பாலசந்தர். கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் இணை. இடைவேளைக்கு முன் ஏரியில் படகில் செல்வார்கள் இருவரும், உடன் நண்பரான ரஜினிகாந்த் படகைச் செலுத்திக் கொண்டு. வசந்த கால நதிகளிலே... பாட்டு முடியும்போது ஏரிக்குள் விழுந்துவிட்டிருப்பார் கமல்ஹாசன், அத்துடன் குளோஸ். கடைசி பாராவை ரஜினிகாந்த்தான் பாடி முடிப்பார். பிறகு படம் முழுவதும் ரஜினி - ஸ்ரீதேவிதான்.

1977-ல் ரஜினிகாந்திற்கு அவர்கள், கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலே, ஆறுபுஷ்பங்கள் எனப் பல படங்கள்.

பாரதிராஜா முதல் படமான பதினாறு வயதினிலே தமிழ் திரைப்படத்தின் போக்கையே மாற்றிப் போட்டது என்றால் மிகையில்லை. இந்தப் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள், கமல் ஹீரோ, ரஜினி வில்லன், நாயகி ஸ்ரீதேவி!

பின்னர் தொடர்ந்த காலங்களில், இருவரும் சேர்ந்து இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் தனித்தனியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் திரையுலகில் தங்களுக்கான சந்தையை உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள். நெற்றிக்கண்  படத்தில் இரட்டை வேஷங்களில் சீனியர் ரஜினிகாந்த் நடிப்பு அப்பவே வேற லெவல்.

இன்றைக்கு அரங்கேற்றத்திலிருந்து கணக்கிட்டால் நடிப்பில் 50-வது ஆண்டை (பொன் விழாவை) நெருங்குகிறார் கமல்ஹாசன். வயது 67!

இப்போதும் ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் திரைப்படங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்ணாத்த, எந்திரன் - 2, கபாலி, காலா... வயது 71!

எத்தனையோ நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தாலும் இவர்களுடைய திரைப்படங்கள் யாவும் இவர்கள் இருவருக்காகவே விற்பனையாகின்றன. இருவருடைய படங்களின் வெற்றி தோல்வியும் இவர்களுடையதாகவே பார்க்கப்படுகின்றன. இன்றைக்கும் திரைச் சந்தையில் இவர்கள் எவ்விதத் தொய்வுமின்றி விற்பனையாகிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் பிறகு, 1990-களின் தொடக்கத்தில் வந்து, இப்போதும் இரு துருவங்களாக மாஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய்யும் அஜித்தும் சந்தையில் இருக்கிறார்கள். தனி டிராக்கில் சூர்யாவும். ஆனாலும் கமல் - ரஜினியின் வெற்றிகளுக்கோ விற்பனைக்கோ எவ்விதத் தடையுமில்லை, தடங்கலுமில்லை, சுணக்கமுமில்லை.

இவர்கள் இருவருக்கும் பிறகு திரையில் தோன்றிப் பெரும் வெற்றிகளைக் கொடுத்தபோதிலும் நீடித்திருக்க முடியாத நிலையில் - காலவெள்ளத்தில் -  வெளிச்சத்திலிருந்து வெளியே சென்றுவிட்டவர்களின் பட்டியலை நினைத்துப் பார்த்தால் நம்பவே இயலாது. சரத்பாபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், அர்ஜுன், சுரேஷ், பிரபு, பார்த்திபன், சத்யராஜ், விஜயகுமார், நெப்போலியன், பிரபுதேவா, பிரசாந்த், அப்பாஸ்... சத்யராஜ் போன்ற சிலர் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். (பத்தாண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும்கூட லைம்லைட்டில் இருக்கும் வடிவேலு இந்தப் பட்டியலில் வர மாட்டார்).

ஹிந்தித் திரையுலகில் மட்டும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போலவே அமிதாப்  பச்சனும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய பாணி எல்லாம் மாறிவிட்டது. வயதுக்கேற்ற, மாறுபட்ட குணச்சித்திர நடிகராகிவிட்டார்,  நம்மவர்களைப் போல தொடர்ந்து ஹீரோக்களாக அல்ல.

தங்கள் வயதில் அல்லது திரையுலக அனுபவத்தில்கூட பாதிக்கும் குறைவான இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் கமலும் ரஜினியும் இப்போதும் துடிப்பான ஆக்.ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காலத்தை வென்று இவர்கள் நிற்பதற்கான காரணங்களில் மிகவும்  முக்கியமானவை  - acceptance, adoption! புதியனவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள், உள்வாங்கிக்  கொள்கிறார்கள். புதிய, இளைய இயக்குநர்கள் என்றபோதிலும்  அவர்களிடம் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டு நடிப்பை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள். (நடிப்பில் ஒப்பிட முடியாத சிவாஜி கணேசன், முதல்  மரியாதையில் இயக்குநர் பாரதிராஜா சொன்னதை மட்டும் செய்துவிட்டுப் போனபோதுதான் தமிழில்  தலைசிறந்த படங்களிலொன்று கிடைத்தது. - படப்பிடிப்பின்போது, என்னடா, நடிக்கவே விடமாட்டேங்கிறான் இவன் என்பாராம்  சிவாஜிகணேசன், பாரதிராஜாவைப் பற்றி).

முதன்முதலில் பிராண்டட் இயக்குநர்களை விட்டுவிட்டு இளைய இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்தபோது பலரும் நம்ப முடியாமல் பார்த்தார்கள். வெற்றி சாத்தியப்பட்டது. லிங்கா என்ற படுதோல்விப் படத்துக்குப் பிறகு கபாலியை ரஜினியால் தர முடிந்தது.

விக்ரம் - 2வில் தாமே படத்தின் தயாரிப்பாளர் என்றபோதிலும்கூட எங்கேயும்  துருத்திக்கொண்டு வெளிப்படாமல் இயக்குநர் வழியிலேயே செல்கிறார்   கமல்ஹாசன். இடைவேளை வரை ஒற்றைச் சொல்லைத் தவிர அவருக்கு டயலாக்கூட எதுவுமில்லை.

இன்றைய 'லேட்டஸ்ட் டிரண்ட்'க்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்  கொள்கிறார்கள் இருவரும். இளைஞர்களுடன் இணைந்து கிடைக்கும் வெற்றிகளைப் பார்த்த பின் அடுத்தடுத்தும் இணையத் தயாராகிறார்கள். 

சந்தையில் இன்னமும் மெகா விற்பனைக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை விக்ரம் 2-வின் வெற்றி மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

முதலாம் விக்ரம் படம் ஒரு கோடியில் தயாரிக்கப்பட்டதாகவும் தமிழில் ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் என்றும் வெளிவந்த  காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இரண்டாம் விக்ரமின் தயாரிப்புச் செலவு 120 கோடி இருக்கலாம் என்றும் தற்போது வசூல் 300 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்றென்றுமாகத் தொடருகிறது கமல் - ரஜினியின் வெற்றியும் திரைத்துறை வணிகமும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com