
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பட டீசர் தஞ்சாவூரில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படத்தின் முன்னோட்டம், பாடல்கல் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற ஜூலை 7 ஆம் தேதி தஞ்சாவூரில் மிக பிரம்மாண்டமாக வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இதுகுறித்து தகவல் வெளியாகலாம்.
பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, திரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து சிஜி பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க | 'ரெண்டும் எப்படி சரியாகும்? யோசிச்சு பேசுங்க...'' - சாய் பல்லவிக்கு விஜயசாந்தி கடும் எச்சரிக்கை
ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம், ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி, வந்தியத் தேவன் வேடத்தில் கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடித்துள்ளனர். இவர்களது தோற்றப் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜிஆர் முயற்சி செய்தார். இதற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பை இயக்குநர் மகேந்திரனிடம் அளித்தார். பின்னர் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் கமல்ஹாசனும் முயற்சி செய்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் விஜய், மகேஷ் பாபு, கார்த்தி ஆகியோர் நடிப்பில் படமாக்க திட்டமிட்டார். அப்போதும் நடைபெறவில்லை. ஒரு வழியாக தற்போது பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கியதன் மூலம் பலரின் கனவை நிஜமாக்கியிருக்கிறார்.
பொன்னியின் செல்வனின் பாதிப்பில் நிறைய படங்கள் உருவாகியிருக்கின்றன. படையப்பா பட நீலாம்பரியின் கதாப்பாத்திரம் பொன்னியின் செல்வனின் நந்தினியின் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...