
படையப்பா காட்சியை சின்னத்திரை தொடரான சத்யாவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களின் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
ஜி தமிழ் தொலைக்காட்சியின் சத்யா என்ற தொடருக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக, தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருகிறது.
இந்தத் தொடரில் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகி எதிரியை அவரது வீட்டில் சந்திக்கிறார். அப்போது அவருக்கு அமர்வதற்கு இருக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. உடனே படையப்பா படத்தில் வருவதுபோல தனது லத்தியின் மூலம் மேலே மாட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலை அவிழ்க்கிறார். பின்னர் படையப்பா பின்னணி இசை ஒலிக்க அதில் ஸ்டலாக அமர்கிறார்.
தற்போது இந்த விடியோவை வடிவேலு அதிர்ச்சியாவதுபோல ரசிகர்கள் கிண்டல்செய்து மீம் வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர். படையப்பா படத்தில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, ரஹ்மானின் பின்னணி இசை என இன்றளவும் ரஜினி ரசிகர்களிடையே மனம் கவர்ந்த காட்சியாக உள்ளது.
இதையும் படிக்க | நெல்சனின் 'கோலமாவு கோகிலா' ஹிந்தி ரீமேக் - முக்கிய தகவல்
முன்னதாக தெறி படத்தில் நடிகர் விஜய் பள்ளிக்கூடம் ஒன்றில் குற்றவாளிகளுக்கு பாடம் எடுப்பதுபோல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியை சத்யா தொடரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. அடுத்து என்ன படத்தின் காட்சியை மீள் உருவாக்கம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சத்யா தொடரில் விஷ்ணு மற்றும் ஆயிஷா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக இருவரது காதல் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.