''யுவன் பாவம்... இளையராஜா ஏன் இப்படி பண்ணார்னு தெரியல...'' - இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்

மாமனிதன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் இளையராஜா குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்தார். 
''யுவன் பாவம்... இளையராஜா ஏன் இப்படி பண்ணார்னு தெரியல...'' - இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்

மாமனிதன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் இளையராஜா குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்தார். 

யுவன் ஷங்கர் ராஜா  தனது ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ள 'மாமனிதன்' படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். 

மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 23 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய சீனு ராமசாமி, ''இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார் என்றதும் அவருக்கு மறக்க முடியாத மாதிரி ஏதோ ஒன்று செய்ய நினைத்தேன். அதனால் இந்தக் கதையைப் பண்ணைபுரத்துக்கு மாற்றினேன். இளையராஜாவின் வீடு இருந்த தெருவில் கேமரா வைத்து படமாக்கத் துவங்கினேன். 

இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கலாம். ஆனால் அவர் பிறந்த ஊரில் கேமரா வைத்த பெருமை எனக்குத்தான். அவர்கள் வாழ்ந்த ஊரை பதிவுசெய்தேன். இதனை இளையராஜா பார்த்தால், அவர்கள் சிந்தனை எப்படி தூண்டப்படும். அவர் எப்படிப்பட்ட இசையை நமக்கு தருவார் என்று நினைத்தேன். 

மேலும், யுவன் ஷங்கர் ராஜாவின் மீது இருந்த அன்பின் காரணமாக 37 நாட்களில் இந்த படத்தை முடித்துக்கொடுத்தேன். படம் ஏற்கனவே எடுக்கப்பட்ட படம். அதனை இளையராஜா பார்த்தார். பாடல்கள் பதிவிற்கும்,பின்னணி இசை சேர்ப்புக்கும் நான் அழைக்கப்படவில்லை. அது ஏன் என எனக்கு தெரியவில்லை. 

என்னிடம் ஒப்பந்தம்போடும்போதே அவர்களுக்கு பிடித்த கவிஞர்களுடன் தான் அவர்கள் வேலை செய்வார்கள் என்று சொல்லிவிட்டார்கள். என் படத்தில் வைரமுத்து தொடர்ந்து பாடல் எழுதியிருக்கிறார். யுவன் இசையிலும்தான் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். யுவனுடன் மட்டும் நீங்கள் சேருவீர்கள். என்னை மட்டும் தவிர்க்கிறீர்கள். 

எனக்கு பாடல்வரிகள் கூட காட்டப்படவில்லை. யுவன் பிறந்தநாளுக்கு சென்றேன். அப்பொழுது ஒரு இளைஞர் என்னிடம் வந்து, 'நான் பாடலாசிரியர் கருணாகரண். உங்கள் படத்தில் நான் பாடல் எழுதியிருக்கிறேன்' என்றார். அவரை வாழ்த்திவிட்டு பாடல்வரிகளைத் தருமாறு கேட்டேன். அவர் மிக அழகாக எழுதியிருந்தார். 'சிறகினை விரித்தேன். ஆகாயத்தைக் காணவில்லை' என்ற வரிகள் நன்றாக இருந்தது. 

இளையராஜாவின் மீதான அன்பினால் இந்தப் படத்தை பண்ணைபுரத்தில் படமாக்கினேன். இந்தப் படத்தையே ஜீவா இளையராஜாவிற்குதான் சமர்பணம் செய்தேன். ஆனால் என்னை ஏன் தவிர்க்கிறீர்கள் என புரியவில்லை. 

நான் 3 மணி நேரம் 20 நொடிகளுக்கு பாடல் காட்சிகளை பதிவு செய்துவைத்திருந்தேன். இளையராஜா மிக சரியாக பாடலை அந்த நேரத்துக்கு அமைத்திருந்தார். இப்பொழுதும் அவரை நான் இந்தப் படத்தின் முதல் மாமனிதனாக மதிக்கிறேன். இன்னும் நிறைய படத்தில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் நான் இசையமைக்கும்போது நான் உடன் இருக்க வேண்டும். 

யுவன் மேல் எந்த தப்பும் கிடையாது. யுவன் ஷங்கர் ராஜா பாவம். யுவன் மிகப்பெரிய ஆசையுடன் இந்தப் படத்தை என்னையும், விஜய் சேதுபதியையும் ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார். இந்தப் படம் வெளியாவதற்கு ஒரு காரணமாக இருந்த யுவனின் துணைவியாருக்கு நன்றி. யுவனின் கூடா நட்புதான் இந்தப் படத்துக்கு தடையா இருந்தது.  என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com