
பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி யூடியூபில் 12 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை இந்தப் பாடல்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனிருத் இசையில் இந்தப் படத்தின் மற்ற பாடல்களையும் கேட்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறதாம்.
பாடலாசிரியர் என்ற முறையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ள விஜய் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளதாம்.
கரோனா பரவல் காரணமாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பிகில் படத்தில் ரசிகர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக நுழையும் லாஸ்லியா
தனது பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பீஸ்ட் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.