சீரியல் இயக்குநரிலிருந்து இந்தியாவின் அடையாளம்: ராஜமௌலியைப் போன்று கனவு காணுங்கள்

 இந்திய இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் இயக்குநர் ராஜமௌலியின் வெற்றிக்கதை 
சீரியல் இயக்குநரிலிருந்து இந்தியாவின் அடையாளம்: ராஜமௌலியைப் போன்று கனவு காணுங்கள்

'பாகுபலி', ஆர்ஆர்ஆர் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களை வெறும் பிராந்திய மொழி படங்கள் என்று சொல்லும் நிலையிலிருந்து இந்திய திரைப்படம் என்று சொல்லும் நிலைக்கு ராஜமௌலி உயர்த்தியிருக்கிறார் . 

தனித்தனி கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் காரணமாக ஒவ்வொரு மாநில மக்களின் ரசனைகளும் வேறுபடும். பேன் இந்திய படம் எனப்படும் இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களுக்கான படங்களை வெற்றிகரமாக உருவாக்கி வருகிறார் ராஜமௌலி. 

2001 ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 'ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜமௌலி. தற்போது வெளியான 'ஆர்ஆர்ஆர்' வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் 11 படங்களை இயக்கியிருக்கிறார். அந்த நேரத்தில் இயக்குநர்கள் ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்கள் இயக்கிய நேரத்தில், ராஜமௌலி துவக்கத்திலிருந்தே ஆண்டுக்கு ஒரு படம், இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என்ற இடைவேளைகளில் படம் இயக்கி வந்திருக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடலே இந்த இடைவேளைக்கு காரணம். 

முதலில் சொன்னதுபோல கலாச்சாரங்கள், பழக்கவங்கள் வேறுபட்டாலும் மக்களின் உணர்வுகள் ஒன்றுதான் என்பதற்கேற்ப அவரது படங்கள் பெரும்பாலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றிருக்கின்றன. 

ரீமேக் செய்யப்பட்ட ராஜமௌலி படங்கள்: 

ராஜமௌலியின் முதல் படமான 'ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' திரைப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படம் நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியின் 2வது படமான 'சிம்ஹாத்ரி' படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் 'கஜேந்திரா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குநர் ராஜமௌலியின் 4வது படமான 'சத்ரபதி' படம் பெங்காலி, கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் தரணி இயக்கத்தில்  விஜய் நடித்த குருவி திரைப்படம் சத்ரபதி படத்தின் மூலக்கதையைக் கொண்டு உருவானது. தற்போது இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. 

இயக்குநர் ராஜமௌலியின் 5வது படமான 'விக்ரமார்குடு' தமிழில் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 'சிறுத்தை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் 'ரவுடி ரத்தோர்' என்ற பெயரில் பிரபு தேவாவால் ரீமேக் செய்யப்பட்டு பெரும்வெற்றிபெற்றது.  மேலும் கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

இவரது 8வது படமான 'மரியாத ராமண்ணா' தமிழில் சந்தானம் நடிப்பில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. 

ராஜமௌலியின் தற்போதைய உயரத்துக்கு காரணம்: 

இயக்குநர் ராஜமௌலி மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகும் படங்களுக்கு முதல் படத்திலிருந்தே திட்டமிட்டு அதற்கேற்ப படங்களை இயக்கி வந்திருக்கிறார். இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது ஒரு நகைச்சுவை நாயகனை வைத்து 'மரியாத ராமண்ணா' படமெடுத்து வென்றுகாட்டினார். இதன்மூலம் நட்சத்திரங்கள் இல்லாமலும் என் படங்கள் பெரிய வெற்றிபெறும் என்பதை திரையுலகினருக்கு காட்டினார். 


 அடுத்ததாக ''எனது படத்தில் ஒரு ஈதான் நாயகன்'' என அவர் சொன்னபோது, தயாரிப்பாளர்கள் சம்மதித்தற்கான காரணம், ''ஒரு நகைச்சுவை நடிகரை வைத்தே வெற்றிபெற்றவர், ஈயை வைத்து வெற்றியைக் கொடுக்கமாட்டாரா?' என்பதாகத் தான் இருந்திருக்கும். அவரது 'மகதீரா' படம் தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்றது.

இதனையடுத்து அவரது 'நான் ஈ' படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கினார். இதன் காரணமாக அவரது படத்துக்கான வியாபாரம் பெருகியது. நான் ஈ வெற்றியின் மூலம் என் படத்துக்கு நான்தான் நாயகன் என்பதை சொல்லாமல் சொன்னார். இந்தியாவே அவரைத் திரும்பி பார்த்தது.  'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' படங்களைப் பெரிய பொருட் செலவில் இயக்க இதுதான் அடித்தளம். 

பொதுவாக பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள் என்றால் அதற்கேற்ப பெரிய நட்சத்திரங்கள் வேண்டும் என்பார்கள். காரணம், இங்கே நடிகர்களின் முந்தைய படங்களின் வியாபாரத்தை பொறுத்தே, அவரது அடுத்த படத்தின் முதலீடு அமையும். ஆனால் ராஜமௌலி அந்த எண்ணத்தை தனது படங்களில்  தொடர்ந்து உடைத்துவந்தார்.  

இவரது படங்களின் வெற்றிக்கு காரணம் மிரட்டலான சண்டைக்காட்சிகள், மனதை உருக்கும் சென்டிமென்ட் மற்றும் கூடவே புராண கதைகளை நினைவுபடுத்தும் விதமான காட்சியமைப்புகள். இதன் காரணமாக மொழிகள் கடந்து இவரது படங்களை ரசிக்க முடிகிறது. இதற்கு அடிப்படை ராஜமௌலியின் கண்ட கனவும், தன் கனவை அடைய அவர் எடுத்த முயற்சிகளும்தான்.  ராஜமௌலியைப் போல் கனவு காணுங்கள்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com