தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்துங்கள்: அஜித்துக்கு இயக்குநர் செல்வமணி வேண்டுகோள்

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்துவதால் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு...
செல்வமணி (கோப்புப் படம்)
செல்வமணி (கோப்புப் படம்)

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவரும் இயக்குநருமான செல்வமணி கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி கூறியதாவது:

ஃபெப்சி அமைப்புடனான தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்பந்தம் ரத்தானதாக செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக எங்களுக்குக் கடிதம் வரவில்லை. 

ஒப்பந்தம் ரத்தானதாக முடிவு எடுக்கப்படவில்லை எனத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி என்னிடம் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி இடையே சென்னையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. வரும் 8-ம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அன்றைய தினம் சென்னையில் படப்பிடிப்புகள் நடைபெறாது.

சிலநேரங்களில் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பை நடத்தவேண்டிய சூழல் இருந்தால் அதைச் செய்வதில் தவறு இல்லை. ஆனால் சென்னை அண்ணா சாலையையும் தேனியையும் சென்னை உயர் நீதிமன்ற செட்டையும் ஹைதராபாத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்துவது தவறு. இந்தக் கோரிக்கையை விஜய்யிடம் நாங்கள் தெரிவித்தபோது அதை அவர் ஏற்றுக்கொண்டார். ரஜினி சாரிடமும் சொன்னோம். அவருடைய படங்களில் சிலசமயம் பிரமாண்டமான செட்களின் தேவைக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்றார்கள். சிலநேரங்களில் அப்படிப் போனால் பரவாயில்லை. மற்றபடி தொடர்ச்சியாகச் செல்வது தவறு. 

இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களும் ஒரு வேண்டுகோள். நடிகர் அஜித்துக்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்கிறோம். நீங்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்துவதால் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு, அதனால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் உங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படும். அதனால் தயவுசெய்து நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் இதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com