மனிதனை இப்போது குரங்கு என்போமா? சரத்குமார் அறிக்கை: கமலுக்கு பதிலடி?

ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என உருவான சர்ச்சை குறித்து நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
மனிதனை இப்போது குரங்கு என்போமா? சரத்குமார் அறிக்கை: கமலுக்கு பதிலடி?
Published on
Updated on
1 min read

ராஜராஜ சோழன் இந்துவா? இல்லையா?  என உருவான சர்ச்சை குறித்து நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,  திருவள்ளுவருக்கு காவி உடை  கொடுப்பதுபோல, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது போல பல அடையாளங்கள் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சினிமாவிலும் இது நடந்துவருகிறது என்றார். வெற்றிமாறனின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் பார்த்த நடிகர் கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதம் இல்லை. ஹிந்து என்பது வெள்ளைக்காரர்கள் நமக்கு அளித்த பெயர் என வெற்றிமாறனுக்கு ஆதரவாக பதிலளித்தார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் வெற்றிமாறன் மற்றும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்துள்ள சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? ஆகியவை பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்றுகொண்டிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணம், சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

1790 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களைத் தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களுக்கு சிந்து நதியில் இருந்து மருவிய இந்து என்ற பெயரிடப்பட்டது. 

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால் விலங்கினத்திற்கு மனிதன் எனப் பெயரிட்டது யார்? 

மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா ? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றி விட்டோம். ஆனால் இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம் 

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்கப்போகிறோம்? ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கலாமா? 

சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை எனும்போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? 

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com