வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்: நயன்தாரா விதி மீறலா?

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றாரா நயன்தாரா? கிளம்பும் சூறாவளி
சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றாரா நயன்தாரா? கிளம்பும் சூறாவளி
Published on
Updated on
3 min read

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

திரைப்பட நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டகிராம் மூலம் பகிர்ந்து கொண்டார்.

முதலில் இந்த பதிவைப் பார்த்து பலரும் குழப்பம் அடைந்தனர். நயன்தாரா எப்போது கர்ப்பமானார்? எப்படி இது ஊடகத்திடமிருந்து மறைக்கப்பட்டது என பலருக்கும் பல பல குழப்பங்கள். விக்னேஷ் சிவன் ஏதோ நகைச்சுவைக்காக இப்படி செய்கிறார் என்று கூட சிலர் நினைத்திருந்தனர்.

பிறகுதான் குழந்தைகளின் கால்களைப் பிடித்தபடி நயன்தாராவும்  விக்னேஷ் சிவனும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, விக்னேஷ் சிவன் சொன்னது உண்மைதான் என்று உணர்த்தியது.

குழந்தைகளின் புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, நயன்தாராவும் நானும் அம்மா அப்பாவாகியுள்ளோம். இரட்டைக் குழந்தைகளால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்களின் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசி போன்ற நல்லவற்றின் வெளிப்பாடு எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக பிறந்துள்ளனர்''.

என் உயிர் மற்றும் உலகத்திற்கு உங்களுடைய ஆசிர்வாதமும் தேவை. ஐ லவ் யூ டூ  & ஐ லவ் யூ த்ரீ'' என பதிவிட்டுள்ளார்.  அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வாறு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்றால் வாடகைத் தாய் முறை என்பது குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத தம்பதியருக்காக சட்டப்படி உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்பு. அதனை வழிநடத்த சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த சட்ட விதிகளுக்கு முரணாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகக் கூறப்படுவதுதான் சர்ச்சையாகியுள்ளது.

அதாவது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன தகுதி?
சட்டப்படி, ஒரு தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான தகுதிச் சான்றுகள் மற்றும் தேவை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு தகுதி பெற்ற தம்பதி என்பவர், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள்தான். 

அந்த தம்பதியினரில் மனைவியின் வயது 25 - 50ஆகவும், கணவரின் வயது 26 - 55 ஆகவும் இருக்க வேண்டும்.

தம்பதிக்கு பிறந்த, தத்தெடுத்த, வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகள் என யாரும் இருக்கக் கூடாது.

ஆனால், இதில் மனநிலை மற்றும் உடல் மாற்றுத்திறனாளி, உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பின் விதிவிலக்கு.

மாவட்ட மருத்துவ வாரியத்தால், தம்பதியரில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி இல்லை என்பதற்கான சான்றினை பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதில் அடிப்படையான சட்ட விதியாக இருக்கும் குறைந்தபட்சம் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில சட்டவிதிகளுக்கு எதிராகவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலில் வாடகைத் தாய் மூலம்தான் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பிறகு அவர் இந்தியாவில் இருக்கிறாரா? வெளிநாட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறாரா? இந்த சட்ட விதிகள் அந்நாட்டுக்கு பொருந்துமா? அந்நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

இது பற்றி அமைச்சரிடமே கேட்கப்பட்டும்விட்டது.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பிறப்பு பற்றி கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றானரா? அதில் விதிமீறல் உள்ளதா? என விளக்கம் கேட்கப்படும் என பதிலளித்தார். 
வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள், இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வெளிநாடுகளுக்கு தேன் நிலவுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருப்பது பல கேள்விகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இது தமிழக மருத்துவத் துறை அமைச்சர் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com