புதிய சர்ச்சைகளை உருவாக்குமா?: அக்‌ஷய் குமாரின் ராம் சேது பட டீசர் வெளியானது!

டீசரில் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது இந்தப் படம் புதிய சர்ச்சைகளை...
புதிய சர்ச்சைகளை உருவாக்குமா?: அக்‌ஷய் குமாரின் ராம் சேது பட டீசர் வெளியானது!

அக்‌ஷய் குமார் நடித்த ராம் சேது படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 

அக்‌ஷய் குமார், சத்ய தேவ், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நாசர் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - ராம் சேது. இயக்கம் - அபிஷேக் சர்மா. 

ராமர் பாலம் என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியான ராமேசுவரம் தீவு என்றழைக்கப்படும் பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் வளைகுடாவுக்கு இடையே உள்ள சுண்ணாம்புப் பாறைகளால் ஆன சங்கிலித் தொடர் பாலம் ஆகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தப் பகுதியில் சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, சுண்ணாம்புப் பாறைகளால் உருவாக்கப்பட்டிருப்பது ராமர் பாலம் என்றும், இதனை அகற்றி சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், 2007-ம் ஆண்டில் சேது சமுத்திரம் கால்வாய்த் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் திட்டம் சமூக-பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், தற்போதுள்ள ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் மாற்று வழியில் ராமர் பாலத்தை ஏற்படுத்தி இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அப்போதைய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து புதிய திட்டத்தை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது சேது சமுத்திர திட்டத்தை தேசியப் புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்துள்ளார். இதுதொடா்பான கோப்புகளை ஆராய்ந்து பதிலளிப்பதாக மத்திய அரசு கூறியதையடுத்து, கடந்த மாதம் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கும் ராம் சேது படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.  இந்தப் படம் தொடர்பாக படக்குழுவினருக்கு சுப்பிரமணியன் சுவாமி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே டீசரில் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது இந்தப் படம் புதிய சர்ச்சைகளை உருவாக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் 25 அன்று திரையரங்குகளில் ராம் சேது படம் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com