இறைவனின் முகவரி சொல்லும் யானை முகத்தான்: திரை விமர்சனம்

இயக்குநர் ரெஜீஷ் மிதிலா இயக்கத்தில் நடிகர்கள் ரமேஷ் திலக், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது யானை முகத்தான்.
இறைவனின் முகவரி சொல்லும் யானை முகத்தான்: திரை விமர்சனம்

இயக்குநர் ரெஜீஷ் மிதிலா இயக்கத்தில் நடிகர்கள் ரமேஷ் திலக், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது யானை முகத்தான். தமிழ் சினிமாவில் இறைவன் நேரடியாக வந்து பக்தனுக்கு பாடம் புகட்டும் வகையிலான பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அறை எண் 3015ல் கடவுள் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட அதே அடிப்படையிலான கதையில் உருவாகியிருக்கிறது யானை முகத்தான். 

நடிகர் ரமேஷ் திலக் சரிவர வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்துவிட்டு இறைவன் விநாயகரை நம்பி காலம் கடத்துகிறார். அவருக்கு நாளுக்குநாள் கடன் சுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒருநாள் தான் நம்பிய விநாயகர் அவரது அறையிலிருந்து மாயமாகிவிடுகிறார். மாயமாகிப் போன விநாயகர் ரமேஷ் திலக்கிடம் மீண்டும் வந்தாரா? ரமேஷ் திலக் தனது கடன்களை எப்படி அடைத்தார்? என்பதுதான் யானை முகத்தான் மறைத்து வைத்திருக்கும் கதை. 

ஆலமரத்தின் அடியில் திருடன் மறைத்து வைத்த தங்க நகைகளுக்கு அடையாளமாக வைக்கப்பட்ட கல் பின்னாளில் ஒரு கோயிலாக மாறுகிறது. அதனருகில் அமர்ந்து ஒரு சிறுவனுக்கு நடிகர் யோகி பாபு விவரிப்பதாக தொடங்குகிறது கதை. மதங்கள் குறித்தும், இறைவன் குறித்தும் எது பேசினாலும் சர்ச்சையாகும் சூழலில் துணிந்து இறைவனை வைத்து பேசியிருக்கிறார் இயக்குநர். திரைப்படத்தின் தொடக்கத்தில் சாதி தேவையில்லாதது என வரும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. 

பொறுப்பற்ற இளைஞனாக வரும் நடிகர் ரமேஷ் திலக் நன்றாக நடித்திருக்கிறார். திரைப்படத்தின் முதல் பகுதியில் வழக்கமான ஒருவராக இருந்தாலும் இரண்டாம் பகுதியில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். ஊதாரியாக சுற்றித் திரிவதில் தொடங்கி பிறருக்காக இரங்கி வரும் கதாபாத்திர மாற்றத்தில் ரமேஷ் திலக் கவனிக்கச் செய்திருக்கிறார். அவருக்கு துணை செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன ஊர்வசி மற்றும் யோகிபாபு கதாபாத்திரங்கள். 

வீட்டு உரிமையாளர் என்பதைத் தாண்டி இழந்த தனது குடும்பத்தை நினைத்து ரமேஷை அக்கறையுடன் அணுகுவதில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஊர்வசி. எனினும் இப்படிப்பட்ட வீட்டு உரிமையாளர்களைதான் உலகம் சல்லடை போட்டி தேடிக் கொண்டிருக்கிறது. ரமேஷின் நண்பனாக வரும் கருணாகரன் பெரிதாக உதவவில்லை. வழக்கமான குடிக்கு துணையான நண்பன் கதாபாத்திரமாகவே இருக்கிறார். 

ராஜஸ்தான் காட்சிகளிலும், வடநாட்டு பெரியவருக்கு உதவும் காட்சிகளும் படத்திற்கு பெரும் பலமாக இருக்கின்றன. மொழி, இனம், மதம், சாதி பிரிவினைகளுக்கு மத்தியில் இத்தகைய காட்சிகள் அவசியமாகப்படுகின்றன. சமீபத்தில் வெளிவந்த அயோத்தி திரைப்படத்தைப் போன்று கவனிக்கும்படியாக இருக்கிறது யானை முகத்தான். முதல்பாதியில் பெரிதாக கைகொடுக்காத பின்னணி இசைக்கும் சேர்ந்து இரண்டாம் பாதியில் இசையும், பாடல்களும் உதவியிருக்கின்றன. “கஷ்டத்துல உதவாத கடவுள் என்ன கடவுள்?”, “எல்லோருக்குள்ளயும் ஒரு விஷம் இருக்கு...அதுதான் சுயநலம்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன. 

இறைவனை எங்கெங்கோ தேடுவதற்கு பதிலாக உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் நமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணரலாம் என உச்சி மண்டையில் கொட்டிச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இவை தவிர தொய்வான முதல்பாதியின் திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். கதைக்குள் நுழையாமல் வட்டமடிக்கும் முதல்பாதி காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கலாம். இறைவனாக வரும் யோகிபாபுவை அடையாளம் கண்டுகொண்ட ஊர்வசியும், கருணாகரனும் அதன்பிறகு எந்தவித ஆச்சர்யமும் இல்லாமலேயே வாழ்கின்றனர்.

அதேபோல் தனது மகளின் திருமணம் நின்ற பிறகும் கூட கடன் கொடுத்தவர் ரமேஷிடம் சாந்தமாக பேசுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை. லாஜிக் பெரிதாக கண்டுகொள்ளப்படத் தேவையில்லை என்றாலும் இம்மாதிரியான சின்னஞ்சிறு காட்சிகளுக்கும் கூட கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். யோகி பாபு மீதான உடலமைப்பு கிண்டல்களைத் தவிர்த்திருக்கலாம். 
 
பிறருக்கு உதவுவதிலும், மனத்தூய்மையுடன் மக்களை அணுகுவதிலும் இறைவன் இருக்கிறான். மதங்களிலும், சாதிகளுக்குள்ளும், காணிக்கை சடங்குகளுக்குள்ளும் இறைவனைத் தேடுவதில் பலனில்லை எனும் கருத்துக்காகவே யானை முகத்தானை அவசியம் பார்க்கலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com