நடிகை ஸ்ரீதேவி 60வது பிறந்தநாள்: கெளரவித்தது கூகுள்!

மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்துள்ளார். 
 ஸ்ரீதேவி கவன ஈர்ப்புச் சித்திரம்
 ஸ்ரீதேவி கவன ஈர்ப்புச் சித்திரம்

நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாளையொட்டி அவரின் படத்தை சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரமாக (டூடுள்) வடிவமைத்து கூகுள் கெளரவப்படுத்தியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி இந்த கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்துள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் பிறந்தார். சிறுவயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

தென்னிந்தியாவின் பல மொழிகளைப் பேசும் திறன் கொண்ட ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். 

1976ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் நடித்ததற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு முதல்முறையாக தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குரு, சங்கர்லால் போன்ற படங்களின் வெற்றியால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை மட்டுமின்றி ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 

ஹிம்மத்வாலா என்ற ஹிந்தி படத்தின் மூலம் தேசிய அளவிலான நடிகையாக ஸ்ரீதேவி உயர்ந்தார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த பாலிவுட் திரையுலகில், கதாநாயகிக்காக படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்த சாதனை நிகழ்ந்தது ஸ்ரீதேவி வருகைக்குப் பிறகுதான். 

300 படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீதேவி, 2000ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வபோது பங்கேற்றுவந்தார். அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் மூலம் மீண்டும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். 

நடிகை ஸ்ரீதேவிக்கு 2017ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அப்போது அவர் நடித்த மாம் திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 

ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில், நடிகைகள் முதன்மை பாத்திரத்தை ஏற்று நடிக்கும் படங்களும் வெற்றிபெறும் என்ற வரையறையை இந்திய சினிமாவுக்கு வகுத்துக்கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் 2018 பிப்ரவரி 24-ல் இறந்தார். எனினும் இந்திய சினிமாவால் அவர் என்றும் நினைவுகூரப்படுவார். பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீதேவி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com