சர்ச்சை கருத்துக்கு வெளியேற்றம்; கொலை மிரட்டலுக்கு எச்சரிக்கையா? பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனை இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சர்ச்சை கருத்துக்கு வெளியேற்றம்; கொலை மிரட்டலுக்கு எச்சரிக்கையா? பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனை இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டுகார்டு போட்டியாளர்களாக 5 பேரும் பங்கேற்றனர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.

முதலில், சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், அவரை சமையலறை பக்கம் வரவேண்டாம் என்றும் நிக்சன் கூறினார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

அடுத்து கல்லூரி டாஸ்கில் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும், நிக்சனும் மாறிமாறி கருத்துகளை தெரிவித்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.

இதற்கிடையே, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வினுஷா, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரை நிக்‌ஷன் உருவக்கேலி செய்த சம்பவத்தை பற்றி அர்ச்சனா பேசியதால் நிக்சன் கோபமடைந்து ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அர்ச்சனா உள்ளிட்ட சக போட்டியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ‘சொருகிருவேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்றைய வார இறுதி நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிக்சன் வெளியேற்றப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அர்ச்சனா ‘உரிமைக் குரல்’ தூக்கியும் எச்சரிக்கைக்கான மஞ்சள் கார்டு மட்டுமே கொடுக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி வீட்டுக்கு வந்து 4 வாரத்திற்கு பிறகு வினுஷா விஷயத்தை உங்களின் விளையாட்டுக்காக பேசினீர்களா என்றும், வினுஷா வீட்டில் இல்லாத போது இதை ஏன் பேச வேண்டும் போன்ற கேள்விகளையும் அர்ச்சனாவை நோக்கி கமல் முன்வைத்தார்.

முன்னதாக, இந்த சீசனில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பேசுவதாக சக பெண் போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், சர்ச்சை கருத்துக்கே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும்போது கொலை மிரட்டலுக்கு ஏன் மன்னித்து மற்றொரு வாய்ப்பு தருகிறீர்கள் என்று கமலை நோக்கி ரசிகர்கள் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மேலும், வினுஷா வீட்டில் இல்லாதபோது அவரது பிரச்னையை பேசக் கூடாது என்றால், அவர் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு நடந்த டாஸ்க்கில் நிக்‌ஷன் கூறிய ‘உருவக்கேலி’ கருத்தை ஏன் ஒளிபரப்பு செய்தீர்கள் என்ற கேள்வியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதேபோல், பிக் பாஸைவிட்டு வெளியேறிய பிறகு நிக்சனின் கருத்துகளை பார்த்த வினுஷா, அவருக்கு கமல் நியாயம் கேட்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பிரச்னையை கமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது அர்ச்சனாவை குறை சொல்வதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.  

பிரதீப் ஆண்டனி விஷயத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்த போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் வினுஷாவுக்கு ஆதரவாகவும், அர்ச்சனா மீதான கொலை மிரட்டலுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லை என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில், பெண்களை உருவக்கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கான தண்டனை எச்சரிக்கை மட்டும்தானா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com