எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கூச முனுசாமி வீரப்பன்? திரை விமர்சனம்

சந்தனக் கடத்தல் வீரப்பனின் ‘கூச முனுசாமி வீரப்பன்’ ஆவணப்படத்தின் விமர்சனம்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கூச முனுசாமி வீரப்பன்? திரை விமர்சனம்

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து நிறைய கதைகள் வெளிவந்துள்ளன. வீரப்பன் தரப்பிலிருந்து ஒரு கதை, அவரை அணுகிய காவல்துறை தரப்பில் இருந்து ஒரு கதை, பத்திரிகை தரப்பிலிருந்து ஒரு கதை, இவற்றுக்கெல்லாம் தொடர்பே இல்லாதவர்களிடமிருந்து பல கதைகள் என வீரப்பனுக்காக விரிந்த கற்பனை உலகம் என்பது ஏராளம். 

90களில் தமிழ்நாடு-கர்நாடக எல்லைகளில் உள்ள காடுகளைக் கட்டியாண்ட வீரப்பன் அவரது கதையை அவரே சொன்னால் எப்படி இருக்கும்? 

அப்படி ஒரு வரியைப் பிடித்து உருவாகி வெளிவருகிறது கூச முனுசாமி வீரப்பன்.  Zee5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. 1993 முதல் 1996 ஆம் ஆண்டுகளில் வீரப்பனைப் பேட்டி எடுக்க காட்டிற்குள் சென்ற நக்கீரன் பத்திரிகை பதிவு செய்த காணொலிகளை அடிப்படையாகக் கொண்டு வீரப்பன் தனது கதைகளை விவரிக்கும் இந்த ஆவணப்படம் வழக்கமான ஆவணப்படங்களின் வரிசையில் இருந்து வித்தியாசப்பட்டது. 

வீரப்பன் தன்னுடைய கதையை விவரிக்க விவரிக்க அதை விளக்கும் வகையில் காட்சிகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த முதல் சீசனில் 6 எபிசோட்களாக வரும் இணையத் தொடரில் ஒவ்வொரு எபிசோடும் ஒரு கதையை விவரிக்கிறது. வீரப்பனின் தொடக்க காலம் மற்றும் அவரது முதல் கொலை, டி.எஃப்.ஓ. சீனிவாசன் கொலை, சிறப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் படுகாயம், பொதுமக்கள் வதை முகாம்கள் என காவல்துறை செய்த சித்ரவதைகள், காவல்துறைக்கும், வீரப்பனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவித்த மக்களின் நிலை, வீரப்பனின் அரசியல் நிலைபாடுகள் என எபிசோடுகள் விரிகின்றன. 

ஆவணப்படம் என்றால் நமக்குள் இருக்கும் ஒரு இறுக்கமான மனநிலையை உடைத்து சகஜமாக ஒரு சினிமாவைப் பார்ப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது இந்த இணையத் தொடரின் வெற்றி எனலாம். வீரப்பனின் வாழ்க்கையை அவரே தனது குரலில் பேசும் இடங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. யாரும் எளிதில் செல்ல முடியாத காட்டிற்குள் இருந்து கொண்டு லண்டன் பிபிசி செய்தியை தினந்தோறும் கேட்பது தொடங்கி உளவாளிகளை வைத்திருந்தது, விலங்குகளின் குரல்களை நகலெடுப்பது, அரசியல் கருத்துகளில் இருந்த கூர்மைத்தன்மை என பல விஷயங்கள் ஏற்கெனவே அறிந்திருந்தாலும் அவை காட்சிகளாக விரியும்போது தொய்வை ஏற்படுத்தாமல் ஆர்வத்தைக் கிளர்கின்றன. 

பெரும்பாலும் வீரப்பனின் காணொலிகள் ஆவணப்படம் முழுக்க நிறைந்துள்ளன. 4வது எபிசோட் மட்டும் அதாவது மலைவாழ் மக்கள் மீது காவல்துறையினரின் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல் குறித்த பகுதியில் மட்டும் வீரப்பனின் காணொலிகள் இல்லாமல் நகர்கிறது. மனதை ரணமாக்கும் இந்த எபிசோட் மட்டும் வெளியீட்டிற்குப் பிறகு பெரும் பேசுபொருளாகலாம். அதன்மூலம் அவர்களுக்கான இழப்பீடுகள் கிடைத்தால் மகிழ்ச்சி. 

காவல்துறை அதிகாரிகள் குறித்த வீரப்பனின் குற்றசாட்டுகள் அவரின் சொந்த மொழிநடைகளில் வெளிப்படுவதால் கைதட்டல் பெறுகின்றன. “காசு கொடுத்து  ஆடு திண்ணா நான் எதுக்கு கன்னிவெடி வைக்கறேன்?” என அவர் பேசும் இடங்கள்  ஆரவாரமாகிறது. 1000 ஆடுகளை காவல்துறை அதிகாரி கோபால கிருஷ்ணன் திருடியிருப்பார் என அவர் சத்தியமிடும் இடத்திற்குப் பிறகு ஊர்க்காரர் ஒருவர் வீரப்பனின் அதே ஆயிரம் ஆடுகள் திருடப்பட்ட வாக்குமூலத்தை  உறுதிப்படுத்துவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல் வீரப்பனுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு மக்கள்பட்ட இன்னல்கள், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் செய்த செயல்களே அவர்களுக்கு வினையாக மாறியது என மனதுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் காட்சிகளால் நிறைந்திருக்கிறது இணையத்தொடர். 

இடையிடையே நக்கீரன் கோபால், வழக்கறிஞர்கள் மோகன், தமயந்தி, திரைக்கலைஞர் ரோகினி, நிருபர் சுப்பு, காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர், இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், ஊர்மக்கள் என பலரும் வீரப்பன் குறித்த விவரங்களை விவரிக்கின்றனர். வீரப்பனைப் படம்பிடித்த பத்திரிகையாளரும், புகைப்படக் கலைஞருமான சிவசுப்பிரமணியன் இணையத் தொடர் எங்கும் காணப்படவில்லை. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த விமர்சனம், 1996 தேர்தலில் வீரப்பன் ஏற்படுத்திய தாக்கம், நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த பார்வை என வீரப்பனின் அரசியல் பேச்சுகள் அனல் தெறிக்கின்றன. “நான் பிரதமரா வருவேன். ஏன் என்னால முடியாதா? வந்து உங்க எல்லாரையும் வச்சுக்கறேன். மக்கள் எனக்கு ஓட்டு போடுவான். என்ன சாதாரணமா நினைச்சுக்காத” என அவர் பேசும் காட்சிகள் உச்சபட்சமான இடங்கள். 

ஆவணப்படம் என்றாலும் இணையத்தொடருக்கு சினிமாவிற்குத் தேவையான உழைப்பைக் கொடுத்திருக்கிறது படக்குழு. ஜெயச்சந்திரன் ஹாஸ்மி மற்றும் வசந்தின் எழுத்துகள் மிகச்சிறப்பாக திரையில் வந்திருக்கின்றன. இயக்குநர் சரத் ஜோதி, இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன், படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் ஆகியோரின் உழைப்பு நன்றாக வந்திருக்கிறது. தொடக்கத்தில் வீரப்பனை ஒரு கதாநாயகன் பிம்பத்துடன் அணுகினாலும் அதன்பின் இருதரப்பு தவறுகளையும் சுட்டிக்காட்டி நடுநிலையுடன் பயணிக்கிறது இணையத்தொடர். 

என்னதான் வீரப்பன் தன்னுடைய கதையை விவரித்தாலும் அது அவர்தரப்பு நியாயங்களே தவிர அவை மட்டும் ஒட்டுமொத்த வரலாறாகிவிடாது என்பது உறுதி. கர்நாடக தரப்பிலிருந்து ஒரு பத்திரிகையாளர் மட்டும் இணையத் தொடரில் பேசுகிறார். பொதுவாக தியேட்டரில் வெளியாகும் படத்திற்கு சென்சார் பிரச்னை தொடர்பாக வசனங்கள் கட் செய்யப்படும். இணையத்தொடர் என்பதால் அப்படி எந்த வசனமும் நீக்கப்பட்டிருக்காது என நினைத்தால் ஏமாற்றம் மிஞ்சுகிறது. காவல் அதிகாரி தேவாரம் குறித்த வசனங்கள், சந்தனக் கட்டைகளை ஏற்றுமதி செய்ய உதவிய சென்னையைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் பெயர் மியூட் செய்யப்பட்டது என ஆங்காங்கே படக்குழுவே சென்சார் செய்திருக்கின்றனர். அரசியல் பிரச்னைகள் காரணமாக படக்குழு இதைச் செய்திருக்கலாம். 

வீரப்பனின் ஒட்டுமொத்த கதையும் இதில் சொல்லப்படவில்லை. இரண்டாம் சீசனுக்கான ஒரு அறிவிப்புடன் முடிகிறது முதல் சீசன். முதல் சீசன் கொடுத்த ஆர்வமும், தரமான உருவாக்கமும் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com