எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வர வேண்டும்: மோகன் ராஜா

சினிமாவுக்கான கதைகளில் பணியாற்ற எழுத்தாளர்கள் முன்வர வேண்டும் என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வர வேண்டும்: மோகன் ராஜா
Published on
Updated on
1 min read

இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், மோகன் ராஜா, நித்திலன், அருண் குமார் ஆகியோர் இணைந்து நேர்காணல் அளித்துள்ளனர். அதில், இந்தாண்டில் சினிமாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் கதைக்களங்கள் என பல விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, இயக்குநர்கள் பெரும்பாலும் சினிமாவாக மாற்ற சிறுகதைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏன் நாவல்கள் படமாக்க பட முடிவதில்லை? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “இலக்கியத்தில் உச்சங்களைப் பெற்ற படைப்புகளை அதன் உன்னதங்களைக் கைவிடாமல் சினிமாவாக எடுக்க முடியாது. ஒரு நாவலை நான் திரைப்படமாக்க வாங்கினால் நான் அந்த நாவலுக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை வைத்து நான் எதை சினிமாவாக எடுக்கிறோனோ அதன்மேல்தான் கவனமாக இருப்பேன். இது கடினமான பணிதான். புதிய இயக்குநர்கள் ஒரு எழுத்தாளரின் கதைக்கு உரிமம் பெற வேண்டும் என்றால் ரூ.5 - ரூ.10 லட்சம் வரை ஆகும். சமீபத்தில் ரபீக் இயக்கத்தில் வெளியான ‘ரத்தசாட்சி’ திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதைதான். ஆனால், அது இயக்குநரின் முதல் படம் என்பதால் ஜெயமோகன் பணம் பெறாமல் அவருக்கு உதவினார். உண்மையில், அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு கதையின் உரிமத்துக்கு செலவு செய்து படத்தை உருவாக்குவது கடினமான பணி. ஆனால், அதே இயக்குநர் நிலைபெற்று விட்ட பிறகு எழுத்தாளரிடமிருந்து உரிமத்தைப் பெற்று சினிமாவாக மாற்றுவது சுலபமானது. தமிழில் சரியான சினிமா கதாசிரியர்களே இல்லை.  எல்லா இயக்குநர்களும் கதையாசிரியராகவும் அனைத்து கதையாசிரியர்களும் இயக்குநராகவும் ஆசைப்படுவதுதான் இங்கு பிரச்னை” எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய இயக்குநர் மோகன் ராஜா, “மலையாள சினிமாவில் எழுத்தாளர்கள் எம்.டி.வாசுதேவன் நாயர், லோகிததாஸ் போன்றவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர். இன்றும் உலக சினிமா விழாக்களில் இந்தியா சார்பில் கேரளத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும்தான் அதிக சினிமாக்கள் செல்கின்றன. இங்கு சினிமா கதாசிரியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. யார் அதைச் சரியாகப் பயன்படுத்தப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. என்னிடம் யாராவது நல்ல நாவலை எழுதிக்கொண்டு வந்தால் அதைத் திரைப்படமாக்கக் காத்திருக்கிறேன். இதற்கு எழுத்தாளர்கள் முன் வர வேண்டும். இயக்குநரிடம் நல்ல கதையைக் கொடுத்தால் படமாக எடுக்கத்தான் போகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com