லேபில் எங்களின் சிற்சிறு பெருங்கனா: அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றினை பகிர்ந்துள்ளார். 
லேபில் எங்களின் சிற்சிறு பெருங்கனா: அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லேபில்' இணையத் தொடர் நவ. 10 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. வாரம் ஒரு எபிசோடு என்ற நிலையில் வெளியாகி நேற்று இதன் கடைசி எபிசோடு வெளியானது. 

இந்த தொடரில், நடிகர் ஜெய், தான்யா ஹோப், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த இணையத்தொடர் நிறைவைக் குறித்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 


லேபில்- தோன்றின் புகழொடு தோன்றுக.
(முதல் அத்தியாயம்)

நவம்பர் 10, 2023 முதல் இன்று வரை 8 வாரங்கள். எங்கள் உள்ளுணர்வுகளின் ஒரு 'ரோலர் கோஸ்டர் ரைட்’ எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினர்கள் மற்றும் தயாரிப்புக்குழுவினருக்கு மாபெரும் மற்றும் மறக்க முடியாத படைப்பு. லேபிலின் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீடு இவை அனைத்தும் எங்களின் சிற்சிறு "பெருங்கனா".

இப்படைப்பின் கரு நம் அனைவரின் ஏதோ ஒரு குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கமாய் துவங்கி, கதை கண்டு, களம் கண்டு, வடிவம் கண்டு, இன்று முதல் அத்தியாயம் இன்னும் சில கேள்விகளுடனேயே நிறைவு பெறுவது நீண்ட நெடிய சுமத்தலுக்குப் பின் பிரசவிக்கும் ஓர் உணர்வு.

பிரசவித்தலுக்கான காலமே எட்டு வாரங்கள்!!! அதை ஒரு நாளும் உணர்விக்கத்தவறவில்லை இக்குழந்தை. ஒவ்வொரு அரை மணியும் ஒரு பெரும் வாரமாய் மாறி எட்டி உதைக்கவும் தவறியதில்லை உங்களின் அன்பு மட்டுமே இக்குழந்தையை வளர்த்து இதில் உழைத்த அனைவருக்கும் சுகமாய் முழுதாய் பிரசவித்துக் கொடுத்திருக்கிறது. 

இதை உங்கள் குழந்தையாய் பாவித்து உடன் உரையாடி, சீராட்டி, ஊட்டமளித்து, ஊக்கமளித்து, ஆர்ப்பரித்து, ஆதங்கப்பட்டு, அரவணைத்து, புறந்தள்ளி, கொண்டாடி, பரிசீலித்து, பரிந்துரைத்து, தீதென அக்கறைப்பார்வையோடும், நன்றென ஏற்றுக்கொண்டும், இன்னும்.. இன்னும்.. என்று எண்ணி தேடி வந்த உள்ளங்கள் எத்தனை எத்தனை... எப்பேறு!!! இப்பேறு மழலையின் மகிழ்ச்சி அதை ஏற்றுக்கொள்ளும் அளவிலேயே தீர்மானிக்கப்படும், ஆம் !! இம்மழலை உங்கள் அன்பின் முதல் விதை...

உங்கள் அன்பைப் பெற பாடுபட்ட என்னுடன் தோள் சேர்த்து அதை கோபுரம் ஆக்க, என் அன்புக்காக மட்டுமே அயராது சுழன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும்.... ஒவ்வொருவரும் என்றுமே எனக்கான பொக்கிஷங்கள். உங்களால் மட்டுமே "லேபில்" சாத்தியம் ஆகியுள்ளது. உங்கள் அன்பிற்கு எங்களால் முடிந்தவரை உடல், பொருள், ஆவி அனைத்தையும் இப்படைப்பிற்காக சமர்ப்பித்துள்ளோம். இனி “லேபில்” உங்களின் “முழுதாய் பிரசவித்த அன்புக்குழந்தை”.

ஒவ்வொரு வாரமும்!!! நீங்கள் உங்கள் பல்வேறு எண்ண ஓட்டங்களில் இருந்திருப்பீர்கள், ஆவலைக் கட்டுப்படுத்தியிருக்க கூடும், அப்படியே அள்ளித்தழுவவோ!! அப்படியே திட்டித் தீர்க்கவோ வழிவகை செய்ய இயலாது போனதில் சிறு வருத்தமே.. இதில் உங்களுடனேயே நான்!!! எனக்கும் அதே உள்ளுணர்வே!! ஏன் என்றால் கொஞ்சுதலுக்கானதை சுமந்து கொண்டே இருப்பதிலே தானே பெரிய வலியினை காலம் தந்திருக்கும்... ஆயினும் அதையும் எனக்கு சுகமாக்கித் தந்த அனைவரின் அன்பினாலேயே நான் பிரமித்து நிற்கிறேன்.

பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மனநிலைகள், பல்வேறு நிலைப்பாடுகள், நெருங்கிய ஆளுமைகளின் மறைவுகள் பல்வேறு காலநிலை மாறுதல்கள்.. தொடர் இடர்கள், நிலையற்ற சூழ்நிலைகள், அடுத்தடுத்த முன்னெடுப்புகள், மாபெரும் இழப்புகள், சவால்கள் இவை அனைத்திற்கும் மத்தியில் வந்து நின்ற பொழுது....அப்போதைய மனநிலையில் இப்படைப்பு வீரியம் மாறி மாறி, தொடர்பற்று, உங்கள் அன்பை இழந்திருக்கக் கூட ஒரு வாய்ப்பிருந்திருக்கும். அல்லது முற்றிலும் பெற முடியாமல் தவித்திருக்கும்.

இவை எதுவும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது போனதாலேயே இந்த நீண்ட நெடிய விளக்கம். உங்கள் அன்பு மட்டுமே என்னை இதை எழுத வைக்கிறது. “சரியென்றும் தவறென்றும் ஏதுமுண்டோ, அடங்கா அன்பின்பால் விளைந்த விதைக்கு" அப்படியே இதை நானும் புரிந்து கொள்கிறேன்.. ஏனென்றால் அனைத்தையும் மாற்றும், முன்னெடுக்கும் சக்தி உங்களின் அன்பிலும், ஆதரவிலும் உள்ளது.

இதுவரை காத்திருந்து பார்த்தவர்களும், காண காத்திருப்பவர்களுக்கும் என்றுமே எங்கள் அனைவரின் அன்பையும் உரித்தாக்குகிறேன். எல்லா கலை படைப்புமே எல்லாரையுமே திருப்திபடுத்திவிடுமா அப்படி பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா அத பண்ண ஒவ்வொரு முறையும் கலை தன்னை தயார் செய்து கொள்ளும். அதனை முடிந்தவரை முயன்று முடிப்போம், முடியும் வரை முயல்வோம்.

ஓர் பரிச்சார்த்த முயற்சிக்கான வெள்ளோட்டமாக, அன்பின் பதில்களோ, விருப்பு வெறுப்புகளோ அனைத்திற்கும் அப்பாற்பட்டு...தொடங்கிய நேரம் முதல் இன்று வரை எங்களோடு பயணிக்கும் என் உலகமென நான் பெரிதும் மதிக்கும் என் அன்பிற்கினிய திரைக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், படப்பிடிப்பு தள அலுவலர்கள், தயாரிப்பு நிறுவன அலுவலர்கள், உயிருக்கும், உணர்வுக்கும் நெருக்கமாக்கி ஆளுமை செலுத்தி படைத்து, உங்களுக்கு விருந்தளித்த அனைவருக்கும் அவர்களின் அயராது பணிச்சுமையைப் புரிந்து பின்னணியில் இருந்து முழுதாய் ஊக்கமளித்த அவரவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும்....இக்கணத்தில், மனதார நன்றி கூறிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com