பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக ஜி.பி.முத்து மீண்டும் வருகை தந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில், 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த வாரத்தில் பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்படும். இறுதி வாரம் வரை சென்று வெற்றி பெற முடியாது என நினைக்கும் போட்டியாளர் சம்பள பணத்துடன் பணப்பெட்டியையும் எடுத்துச் செல்லலாம்.
அதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளர்கள் வருகை தந்து போட்டியாளர்களின் குறைகளை எடுத்துரைப்பார்கள். இதன்மூலம் போட்டியாளர்களின் தன்நம்பிக்கை குறைய பெரிதும் வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | ’வாரிசு’ எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் பதில்!
முதல் நாளில் சுரேஷ் சக்ரவர்த்தி வந்த நிலையில், இரண்டாம் நாளில் தொகுப்பாளர் பார்வதி வந்திருந்தார்.
இந்நிலையில், இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியேறிய அசல், ராபர்ட் மாஸ்டர், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்த ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்றைய நிகழ்வை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனது எதார்த்தமான நகைச்சுவை கலந்த பேச்சால் பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஜி.பி.முத்து, இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் வரவேற்பை பெற்றார்.
இருப்பினும், தனது குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க முடியவில்லை எனக் கூறி இரண்டாவது வாரமே போட்டியிலிருந்து விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.