ஓயாத சிரிப்பொலி... பிரேம்ஜியின் சத்திய சோதனை - திரை விமர்சனம்

நடிகர் பிரேம்ஜி நடிப்பில் முழுநீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கிறது சத்திய சோதனை.
ஓயாத சிரிப்பொலி... பிரேம்ஜியின் சத்திய சோதனை - திரை விமர்சனம்

வேலையில்லாமல் பொறுப்பற்ற ஆளாக இருக்கும் கதை நாயகனான பிரதீப் (பிரேம் ஜி)  ஒருநாள் தன் காதலியைச் சந்திப்பதற்காக வாகனத்தில் செல்லும்போது இடையே தரிசுப் பகுதியில் இறந்த நிலையில் ஒரு சடலத்தைக் காண்கிறார். பின், எந்தப் பதற்றமும் இல்லாமல் அருகே சென்று வெட்டிக் கொலைசெய்யப்பட்ட நபரின் உடலில் இருந்த தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம், செல்போன் ஆகியவையை எடுத்துக்கொண்டு பிணத்தையும் ஓரத்தில் மறைத்துவைத்து காவல்நிலையம் நோக்கிச் செல்கிறார். அப்போது, வயதான பாட்டி ஒருவரை பாதுகாப்பாக கொண்டு செல்வதாகக் கூறி காவல்நிலைய வாசலில் இறக்கிவிடுகிறார். 

காவல்துறையினரிடம் பிரதீப் சொல்வதற்கு முன்பே,  கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் காவலர்களான குபேரன் (சித்தன் மோகன்), மகாதேவன் (செல்வ முருகன்) ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைகின்றனர். வெட்டுப்பட்டு இறந்த ஆள் கடைசியாக 50 சவரன் நகையை அணிந்திருந்தது தெரிய வருகிறது. ஆனால், சடலத்தில் ஒரு நகைகூட இல்லாததால் சந்தேகம் அடையும் காவலர்கள் மீண்டும் காவல்நிலையம் வருகின்றனர்.

அங்கு பிரதீப் நடந்ததைச் சொல்லி செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றைக் ஒப்படைக்கிறார். ஆனால், சின்ன தங்கச் சங்கிலி மட்டுமே அந்த உடலில் இருந்ததையும் வரும் வழியில் அதை எங்கோ தொலைத்துவிட்டதாகவும் கூறுகிறார். பின், கொலையாளிகள் தாமாகவே காவல்நிலையத்தில் சரண்டர் ஆகிறார்கள். ஆனால், நகைகளை தாங்கள் எடுக்கவில்லை எனக் கூறுவதுடன் எத்தனை வகையான நகைகளை இறந்தவர் அணிந்திருந்தார் என தெளிவாகச் சொல்கிறார்கள். 

தங்கம் விற்கிற விலைக்கு... இந்த நகைகள் கிடைத்தால் நாமே வைத்துக்கொள்ளலாம் என மனக்கணக்கு போடும் காவலர்கள் பிரதீப் பக்கம் திரும்புகின்றனர். என்ன சொன்னாலும் நம்பாத காவலர்கள் பிரதீப்பை காவல்நிலையத்தில் வைத்து அடிக்கிறார்கள்.

கொலையான நபரிடமிருந்த நகைகளை எடுத்தது யார்? பிரதீப் கொண்டு வந்த ஒரு சின்ன தங்கச்சங்கிலியை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும்? இறுதியில் பிரதீப் காவலர்களிடமிருந்து தப்பித்தாரா? என்கிற மீதிக்கதையை முழுநீள நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா!

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா 6 ஆண்டுகளுக்குப் பின் ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கியிருக்கிறார். மிக தாமதமாக அடுத்தப்படத்தை இயக்கினாலும் தான் நம்பிய ஒரு கதையை மிகச்சரியாக திரைக்கு கடத்தி பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார். 

கதாநாயகனாக பிரேம்ஜி நடித்திருந்தாலும் உண்மையான நாயகர்களாக நடிகர்கள் சித்தன் மோகனும் செல்வ முருகனும் ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் வசனங்களால் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முக்கியமாக, அடிதாங்காமல் தப்பி ஓடும் பிரதீப்பை துரத்திச்சென்று பின் முடியாமல் ஒரு மர நிழலில் அமர்ந்தபடி பப்ஜி, ஆடுபுலி ஆட்டம் விளையாடும் காட்சிகளிலும் கொலையாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் காட்சிகளிலும் கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.

படத்தின் முதல் 20 நிமிடங்களைக் கடந்தால்போதும் பின், படம் முடியும் வரை சிரிப்பு வராத காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவிற்கு குற்றவாளிகள், காவல்நிலையம், நீதிமன்றம் என ஒவ்வொன்றிலும் அதன் உண்மை முகங்களை எள்ளலுடன் காட்சிப்படுத்தி நகைச்சுவையால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குநர்.  

படத்தின் இன்னொரு பலம் பாட்டியாக நடித்தவர். பாட்டியை கைது செய்யும் காவலர்களை அப்பாட்டி கதாபாத்திரம் கையாளும் விதத்தில் தன்னால் தேர்ந்த நகைச்சுவை உரையாடல்களை எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர்.

காவல்நிலைய இன்ஃபார்மராக இருக்கும் ’ஜெய்பீம்’ ராஜேந்திரன், நீதிபதியாக வரும் ஞானசம்பந்தம், காவலரான ’ஹலோ’ கந்தசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ள காட்சிகளில் நகைச்சுவை சரியாக கையாளப்பட்டுள்ளது.

நல்ல கதையாக இருந்தாலும் படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதை சொதப்பல் மற்றும் தரமற்ற உருவாக்கம். குறும்படத்தையே திரைப்பட தொழில்நுட்பத்தில் எடுத்துக்கொண்டிருக்கிற காலத்தில் சிறந்த கேமராவில் படத்தை இன்னும் தரமாக எடுத்திருக்கலாம் என்கிற எண்ணமே சில காட்சிகளில் வருகிறது. குறைந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் சில இடங்களில் நடிப்பில் செயற்கைத்தனங்கள் வருவதும் குறை. எதற்கு கதாநாயகி என்கிற அளவிற்கு நாயகியின் காட்சிகள் உள்ளன.

பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றில் குறைகள் இருந்தாலும் இரண்டு மணி நேரத்தை செலவிடும் தகுதியுடன் ரசிகர்களைச் சோதிக்காத படமாக உருவாகியுள்ளது இந்த ‘சத்திய சோதனை!’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com