போபால் விஷவாயு பேரழிவின் ஆவணம்.. தி ரயில்வே மேன் - திரைத் தொடர் விமர்சனம்

போபால் விஷவாயு பேரழின்போது நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது தி ரயில்வே மேன் தொடர்.
போபால் விஷவாயு பேரழிவின் ஆவணம்.. தி ரயில்வே மேன் - திரைத் தொடர் விமர்சனம்

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் போபால் விஷவாயு பேரழிவில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தொடராக உருவாகியிருக்கிறது ‘தி ரயில்வே மேன் - 1984 போபாலின் மறைக்கப்பட்ட கதை’.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் 1984, டிச 2 ஆம் தேதி நள்ளிரவில் பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கும் ‘யூனியன் கார்பைட்’ ஆலை நிறுவனத்திலிருந்து மிக் (Methyl isocyanide - MIC)  ரசாயனம் விஷ வாயுவாகக் கசிந்து மிக வேகமாக காற்றில் பரவுகிறது. இதனால், இந்தக் காற்றை சுவாசித்த பலரும் வீடுகளில்,  சாலைகள் மற்றும் பொது இடங்களில் மூச்சுத்திணறி உயிரிழக்கின்றனர். அந்த நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் இருந்த சில பயணிகளைப் பணியில் இருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரான இஃப்தாகர் சித்திகி (கேகே மேனன்) காப்பாற்றப் போராடுகிறார். அதே நேரம், போபாலில் விஷ வாயு கசிந்தது அறியாமல் கோராக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலும்  1000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் போபாலை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டரால் போபால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் காப்பாற்றப்பட்டனரா? கோராக்பூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதா? விஷ வாயுவால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மக்களுக்கு உதவ மருத்துவக்குழு எப்படி ரயிலில் வந்து சேர்ந்தது? என்கிற உணர்ச்சிமிகுந்த உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து உருவாகியிருக்கிறது இத்தொடர்.

உலகளவில் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் இன்றும் முதல் இடத்தில் இருப்பது போபால் விஷ வாயு விபத்துதான். கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்ற இந்த விஷ வாயு, அதன் பின்பும் போபால் மக்களின் வாழ்வில் புற்றுநோயாக, மூளைக் குறைபாடு கொண்ட குழந்தைகளின் பிறப்பு என பல வழிகளில் மிகப்பெரிய அழிவையே உருவாக்கியது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அலட்சியத்தால் ஒரு நகரமே உருக்குலைந்த கொடுமையை பதைபதைக்கும் வகையில் தொடராக எடுத்துள்ளார் இயக்குநர் ஷிவ் ரவைல். 

ஆயுஷ் குப்தா எழுத்தில் உருவான இத்தொடரில் 1984-ல் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீதான வன்முறைகளைக் காட்சிப்படுத்தியது, அரசு வன்முறையாளர்களைக் கண்டுகொள்ளாதது என ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய மத்திய அரசை சமரசமில்லாமல் கேள்வி கேட்டிருக்கின்றனர். முக்கியமாக, இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய யூனியன் கார்பைட் நிறுவனத்தின் நிர்வாகி வாரன் ஆண்டர்சனை மத்திய அரசு பாதுகாப்பாக அமெரிக்கா அனுப்பி வைத்த நிகழ்வுடனே இத்தொடரின் முதல் எபிசோட் துவங்குகிறது. அரசின் மோசமான அணுகுமுறையும், ஒரு ஆலை நிர்வாகத்தின் திமிர் என போபாலில் நடந்த சம்பவத்தைத் தோலுரித்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். 

உண்மையைச் சம்பவங்களை மையமாக வைத்து வெளியான இணையத் தொடர்களில் கவனம் பெறும் வகையில், நான்கு எபிசோட்களாகத் தயாரான இத்தொடரின் துவக்கத்திலிருந்தே பார்வையாளர்களுக்கு போபால் பேரழிவு சம்பவத்தின் கொடூரத்தை உணர்த்தும் வகையில், பரபரப்பான திரைக்கதையில் சில இடங்களில் பதைபதைப்பை உணர வைத்திருக்கின்றனர்.

போபாலுக்குத் தொடர்புடைய ரயில்வே துறையில் பணியாற்றிய சில தனிநபர்கள், தங்கள் உயிரைப் பற்றி சிந்திக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றியது பலரும் அறியாததாகத்தான் இருக்கும். இந்த உண்மைச் சம்பவத்தைத் திரையில் காணும்போது ஒரு நெகிழ்ச்சியுடனே அந்த நாயகர்களை நினைக்க முடிகிறது.

கேகே மேனன், மாதவன், திவ்யேந்து, பபில் கான் உள்ளிட்டோரின் தத்ரூபமான நடிப்பு விஷ வாயுவால் திணறிக்கொண்டிருந்த போபால் ரயில் நிலையத்தைக் கண்முன்பே கொண்டு வந்திருக்கிறது.

பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் தொழில்நுடப் ரீதியாகவும் கச்சிதமான பணிகளைச் செய்திருக்கின்றனர். பின்னணி இசை, எடிட்டிங் ஆகியவை திரைக்கதை வேகத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. ‘இரயில்வே ஸ்டேஷன் மிஷின்களால் இயங்குவதில்லை. மனிதர்களால் இயங்குகிறது’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.

போபால் பேரழிவின் சாட்சியமாக இருக்கப்போகும் தொடர் என்பதால் இன்னும் அதிக அளவிலான மனித இழப்புகள் குறித்த காட்சிகளைப் உருவாக்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆவணத் தன்மைக்கு நிகரான மதிப்பைப் பெற்றிருப்பதால் உலகளவில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

வரலாற்றில் மறக்க முடியாத இந்தத் துயரத்திற்குப் பின்னால் நடைபெற்ற அரசியல், விதவைகளான ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் நிலை, ஒரு நகரமே நரகமான கொடூரம், இஃப்தாகர் சித்திக் போன்ற உண்மை மனிதர்களின் தியாகங்கள் என தொடர் முழுவதும் நம்மை இறுக்கமான சூழலுக்குள் வைத்திருக்கும் ‘தி ரயில்வே மேன்’ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com