’இந்த சீனெல்லாம் ஆகாது.. என்ன செய்யனும் தெரியுமா?’... ஆவேசமான சமுத்திரகனி!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
’இந்த சீனெல்லாம் ஆகாது.. என்ன செய்யனும் தெரியுமா?’... ஆவேசமான சமுத்திரகனி!

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா  உள்பட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இதனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தொடர்ந்து, இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த நேர்காணலில், “எனக்கு பருத்தி வீரன் படத்தில் நடந்த எதுவும் தெரியாது. ஆனால், ஞானவேல் ராஜா தன் பேட்டிகளில் திமிரான உடல்மொழியில் அமீரைத் திருடன் என்கிறார். ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநரை இப்படித்தான் பேசுவார்களா? தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ‘பராசக்தி’ அமைந்ததுபோல் கார்த்திக்கு ‘பருத்தி வீரன்’ அமைந்தது. இப்படி ஒரு படம் எந்த அறிமுக நடிகருக்கும் கிடைக்காது. கார்த்தி 10 படத்தில் நடித்து அடையும் புகழை ஒரே படத்தில் கொண்டு சேர்த்தவர் அமீர். கார்த்தி ஒவ்வொரு மேடையிலும்  ‘என் அண்ணன் அமீர்’ என்கிறார். ஆனால், அண்ணனைத்தான் ஆள்விட்டு திருடன் எனக் கூறுகிறார்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி,  ஞானவேல் ராஜாவைக் கண்டித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில், 

“பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது.. நீங்க செய்ய வேண்டியது.. எந்தப் பொதுவெளியில எகத்தாளமா உக்காந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ.. அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும்! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இண்டெர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். 

ஏன்னா.. கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு.. அப்புறம் ‘பருத்தி வீரன்’ திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள் பாக்கி இருக்கு. பாவம்.. அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க.. நீங்கதான், “அம்பானி பேமிலியாச்சே..!”

காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஞானவேல் ராஜா தெரிவித்த வருத்தத்திற்கு இயக்குநர் சசிகுமார் கண்டன அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com