லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம்

லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம்

லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லியோ திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.

லியோ பட சிறப்புக் காட்சிகள் தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. அதில் நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்றும் காலை 9 மணிமுதல்தான் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்காக அனுமதியளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தது.

மேலும் காலை 9 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே திரையிடவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைத்துள்ளது. 

லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதம், “கடந்த முறை ஒரு படத்தின் 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. லியோ டிரைலரை வெளியிட்ட திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டது. லியோ படம் 2.45 மணிநேரம் எனத் தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கே அனுமதி அளித்திருக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

லியோ தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “4 மணி ரசிகர்கள் காட்சிக்குதான் அனுமதி கேட்கிறோம்” என்று வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி அனிதா சுமந்த் பேசியதாவது,

“அனைத்துக் காட்சிகளும் ரசிகர்களுக்கு தானே திரையிடப்படுகிறது.  5 காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால்தான் அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள். 5 காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதாக இருந்தால் அரசுத் தரப்பில் பாதுகாப்பில் சமரசம் செய்யக் கூடாது. அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

மேலும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை திரையிட அனுமதி கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கும், அதனை புதன்கிழமை பிற்பகலுக்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்க அரசுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com