ஆஸ்கர் கிடைக்குமா? கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் - திரை விமர்சனம்

டிகாப்ரியோ நடிப்பில் உண்மையைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ திரைப்படம்.
ஆஸ்கர் கிடைக்குமா? கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் - திரை விமர்சனம்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடிப்பில் வெளியாகியுள்ளது ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ திரைப்படம்.

1920-களில் அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் ஓசேஜ் நேசன் என்கிற பகுதியில் ஓசேஜ் இனச் செவ்விந்தியர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.  காரணம், அங்கு வற்றாமல் கச்சா எண்ணை கிடைக்கிறது. அது, அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட பகுதி என்பதால் ஓசேஜ் மக்கள் கச்சா எண்ணை நிறுவனத்தை நடத்தி அதில் நிர்வாகிகளாக வெள்ளையர்களையும் நியமிக்கின்றனர். இதை அறிந்த அமெரிக்கவாழ் வெள்ளையர்கள் ஓசேஜ் நேசனில் வசிக்கப் படையெடுக்கின்றனர்.

அதில் ஒருவராக அப்பகுதிக்கு வந்து சேர்கிறார் எர்னெஸ்ட் (டிகாப்ரியோ). அங்கு அவரது உறவினரான வில்லியம் ஹெல் (ராபர்ட் டி நிரோ) அந்த ஊரைப்பற்றியும் செவ்விந்திய மக்களின் குணங்களைப் பற்றியும் கூறி, எந்த விதமான குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்குகிறார். அப்பகுதியில் அனைவராலும் அறியப்பட்ட பின், எர்னெஸ்ட் அந்த ஊரில் செல்வாக்கு மிக்க பெண்ணான மோலி (லிலி கிளாட்ஸ்டோன்) மீது காதல்கொண்டு ஒருகட்டத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்கிறார். தனக்கான குடும்பத்தை உருவாக்கி அமைதியான வாழ்க்கையையும் நடத்துகிறார்.

அதேநேரம், அங்கு வசிக்கும் ஓசேஜ் இனச் செவ்விந்தியர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். ஆனால், இதுகுறித்த எந்த விசாரணைகளும் நடைபெறுவதில்லை. ஒருகட்டத்தில் நாயகி மோலியின் சகோதரி அன்னா சந்தேகமான முறையில் கொல்லப்பட்டதை அறிந்த குடும்பத்தினர் வழக்கை விசாரிக்க துப்பறிவாளர்களை அணுகி மறைமுக விசாரணையையும் துவங்குகிறார்கள். குறிப்பாக, ஓசேஜ் மக்களிடம் நற்பெயரைப் பெற்ற வில்லியம் ஹொல், இதற்காகத் தன்னால் முடிந்த நிதி உதவியையும் அளிப்பதாக வாக்குறுதி தருகிறார். 

இன்னொரு புறம், ஓசேஜ் சமூகத்தினர் இந்தப் பிரச்னையை அமெரிக்க அரசிடம் கொண்டு செல்ல வெள்ளையர் ஒருவரை நியமிக்கின்றனர். அந்த பகுதியில் செவ்வந்தியர்களுடன் இணைந்து வாழும் வெள்ளையர்களும் விசாரணையை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கின்றனர். 

அமெரிக்காவில் வேறெங்கும் இல்லாத கச்சா எண்ணை வளத்தை வைத்திருந்த ஓசேஜ் மக்களைக் கொல்வது யார்? எதற்காக இதைச் செய்கிறார்கள்? என்கிற கேள்விகளுடன் அமெரிக்க வெள்ளையர்கள் சிலர் ஒரு இனத்தையே அழிக்க முற்பட்ட உண்மைச் சம்பவத்தை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார் இயக்குநர் ஸ்கார்செஸி.

உண்மையில், அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்வந்தியர்கள் பல இனங்களாகவே இருந்துள்ளனர். முக்கியமாக, மிஸிஸிப்பி நதியின் கிளை நதியான ஓசேஜ் நதிக்கரை நாகரிகத்தில் தோன்றியவர்கள் ஓசேஜ் இனம் என்று அறியப்படுகின்றனர். அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் போர் மூலம் வளங்களைச் சுரண்டிக்கொண்டிருந்தபோது அதற்கு இடையூறாக இருந்த செவ்விந்தியர்களை எதற்கும் உதவாத நிலங்களுக்கு அவர்களைத் துரத்தியிருக்கின்றனர். அதில், ஒருபகுதியாக ஓக்லஹோமாவுக்குள் நுழைந்தவர்களே ஓசேஜ் இன மக்கள். அங்கு அவர்களுக்கென 657 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. ஆச்சரியமாக, அப்பகுதியில் கச்சா எண்ணை இருப்பதை அறிந்த அம்மக்கள் 1900-களில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக வாகனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தேவை என்பதை உணர்ந்து எண்ணை நிறுவனங்களைத் துவங்குகின்றனர்.

இந்தக் கச்சா எண்ணை இருக்கும் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களான ஓசேஜ் இனத்தவர்களுக்குக் கீழே வேலை செய்யும் நிலை அமெரிக்க வெள்ளையர்களுக்கு ஏற்படுகிறது. அதில், பல வெள்ளையர்கள் ஓசேஜ் இன பெண்களைத் திருமணமும் செய்துகொள்கிறார்கள். அன்றைய காலத்தில் அப்பகுதியில் 2,229 ஓசேஜ் இனத்தவர்களே இருந்திருக்கின்றனர். அவர்களுக்காக உழைக்க வந்த வெள்ளையர்கள் சிலரே, அச்செவ்விந்தியர்களின் நிலங்களை அபகரிக்க அதன் உரிமையாளர்களையும் அவர்களின் வாரிசுகளையும் கொலை செய்யத் துவங்கியிருக்கின்றனர். அதிலும் ஓசேஜ் மக்களுக்கு ஆதரவாக இருந்தவர்களே இதைச் செய்தது தெரிய வருகிறது. பிற்காலத்தில், இந்தக் கொலைகளைச் செய்தவர்களைக் கண்டுபிடிக்கவே எஃப்பிஐ (FBI) உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மைச் சம்பவத்தை பலர் வரலாற்றில் பதிவு செய்திருந்தாலும் டேவிட் கிரான் என்பவர் மிக விரிவான தகவல்களுடன் 2017 ஆம் ஆண்டு எழுதிய ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே மார்ட்டின் ஸ்கார்செஸி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கருப்புத் தங்கத்தை அபகரிக்க பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை, வெள்ளையர்கள் தங்களின் அரசியலால் எப்படி வீழ்த்தினார்கள் என்பதையே படத்தில் கடத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் ஸ்கார்செஸி ஒரு ஆவணத்தன்மையை கவனத்தில் வைத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. இந்தச் சம்பவத்தை சுவாரஸ்யமாக எடுப்பதற்கு பல வழிகள் இருந்தும் அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இயக்குநர் வென்றிருக்கிறார்.

உரையாடல் மூலமே படிப்படியாக உச்சத்தை நோக்கிச் செல்லும் உத்தியில் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார்கள். ஆனால், இதை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, டிகாப்ரியோ மற்றும் வில்லியம் ஹெலின் கதாபாத்திரத்தை எழுதிய விதம். 

திரையுலகில் 50 ஆண்டுகளாக இருக்கும் ஸ்கார்செஸி, ஒரு நீண்ட விவாதத்தையாவது எழுப்பிவிட வேண்டும் என்பதலோ என்னவோ இயல்பிலேயே வில்லத்தன உடல்மொழியைக் கொண்ட ராபர்ட் டி நிரோவைச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். அமெரிக்கா இன்று வளர்ந்து நிற்கிற உயரத்திற்குப் பின்பே இப்படி மறைக்கப்பட்ட இன அழிப்புகள் இருந்ததையே படம் முடியும்போது நம்மால் உணர முடிகிறது. 

தன் நடிப்புத் திறனைப் பல படங்களில் காட்டிய டிகாப்ரியோ, இப்படத்தில் அக்கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்மொழிகளால் ஒருவர் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதையே மறக்க வைத்திருக்கிறார். தன் மனைவியின் முன்னாள் நல்லவனாக நடிக்கும் காட்சிகளில் டிகாப்ரியோவின் கண்கள் செய்யும் மாயம் தனியாகத் தெரிகிறது. நாயகியாக நடித்த லிலி கிளாட்ஸ்டோனின் நடிப்பும் அபாரம். குறிப்பாக, டிகாப்ரியோவிடம் காதலில் விழும் பார்வையும் நீரிழிவு நோயாளியாக அவதிப்படும் இடங்களிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். செவ்விந்திய முகச் சாயலைக் கொண்டிருந்ததால் இக்கதைக்கு மிகக் கச்சிதமான தேர்வு இவர். 

பின்னணி இசை, நேர்த்தியான எடிட்டிங் போன்றவை கிளாஸிக் படத்திற்கான தோற்றத்தைத் தருகின்றன. எல்லாவற்றையும் விட, கலை இயக்குநர்களின் பணியே இப்படத்தின் தரத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 1920-களின் காலகட்டம், ஆரம்ப காட்சியில் வரும் பழைய அமெரிக்க ரயில், கார்கள், செவ்விந்தியர்களின் கலாச்சார உடைகள், அவர்களின் பண்பாட்டைக் கூறும் சடங்குகள் என நூறு ஆண்டுகளுக்கு முன் நம்மை அழைத்துச் செல்கிறார்கள். சிறந்த தயாரிப்புக்கான ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான உழைப்பு.

ரோட்ரிகோ பிரிட்டோவின் ஒளிப்பதிவு ஒரு கலைத்தன்மையையே முன்வைக்கிறது. எர்னெஸ்ட், மோலியின் திருமண நிகழ்வில் அத்தனை பேர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அழகைக் காட்சிப்படுத்திய விதம் அற்புதம்.

30 வினாடிகளில் விடியோக்களை மாற்றும் ’ரீல்ஸ்’ தலைமுறையின் அவசரம் தெரிந்தும், மூன்றரை மணி நேரத்தை ஒதுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியதுதான் இப்படத்தின் பலவீனம். அந்த நேரத்திற்கு ஏற்ப திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருக்கலாம். ஆனால், சினிமாவைக் கொண்டாடக் கூடியவர்களே ஸ்கார்செஸி போன்றவர்களை அணுக முடியும் என்பதால் திரை அனுபவத்திற்காக, பொறுத்துக்கொள்ளும் மனநிலையில் சென்றால் ’கில்லர்ஸ் ஆஃப் ஃபிளவர் மூன்’ ஏமாற்றத்தைத் தராது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com