லியோவுக்கான கதையில் யார் வில்லன்?

லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
லியோவுக்கான கதையில் யார் வில்லன்?


தயாரிப்பாளர் லலித் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது லியோ.  இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்ததால் தென்னிந்தியாவின் பெரு நட்சத்திரம் நான்தான் என்பதை விஜய் உறுதி செய்திருக்கிறார்.

இந்திய மொழிகளில் இந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே முதல் நாள் வசூலில் லியோவே முதலிடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவுக்கு ஒரு புகழையும் சேர்த்திருக்கிறது. இந்த வெற்றிச் சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு பக்கம் திருப்பூர் சுப்ரமணியம் அடுக்கடுக்காக வைக்கும் குற்றச்சாட்டுகளால் புதிய பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் லலித் குமார்.

என்ன நடந்தது?

லியோ திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் திரையரங்க உரிமையாளர்களிடம் வழக்கமாக ஒப்பந்தம் செய்யும் பங்கீட்டுத் தொகையை உயர்த்தி, 80 சதவீதம் லலித் குமாருக்கும் மீதி 20 சதவீத பங்கீட்டுத் தொகையைத் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கிடைக்கும்படி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அதிகபட்சம் 70/30 என்கிற ரீதியிலேயே பெரும்பாலான படங்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் ஆனால், லலித்குமார் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாலேயே விருப்பமின்றி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறித் தன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

மேலும், கரோனாவுக்குப் பின் 50 சதவீத டிக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நெறி இருந்தபோது மாஸ்டர் திரைப்படம் (தயாரிப்பு - லலித்) திரைக்கு வந்ததால் எங்கள் தரப்பிலிருந்து உதவ 80 சதவீத பங்கீட்டுக்கு ஒப்புக்கொண்டோம். ஆனால், தற்போது நிலவரம் சரியாக இருக்கும் நிலையில் லியோவுக்கும் அதிக தொகையைக் கேட்டதில் எந்த நியாயமும் இல்லை என்றும் இந்தப் பங்கீட்டுப் பிரச்னை காரணமாக எந்தத் திரையரங்க உரிமையாளர்களுக்கும் லியோ லாபம் தரவில்லை எனக் கூறிய சுப்ரமணியம், லலித் போன்றவர்கள் சினிமாத் துறையில் இருந்தால் ஆபத்து என்பது போல் பேசியும் வருகிறார். 

தமிழ் சினிமாவில் முக்கிய நபராக அறியப்படும் திருப்பூர் சுப்ரமணியம், லியோவை மட்டும் ஏன் குறிவைக்கிறார்? இதற்கு முன் இந்த பங்கீட்டுத் தொகைக்கு ஒப்புக்கொண்டவர்கள் இப்போது மட்டும் ஏன் பிரச்னையைக் கிளப்புகிறார்கள்? உலகளவில் ரூ. 500 கோடி வசூலித்த லியோவால் தங்களுக்கு லாபமில்லை என்பதில் என்ன உண்மை இருக்கிறது? என விஜய் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே உள்ளன, சுப்ரமணியத்தின் நேர்காணல்கள். குறிப்பாக, தீபாவளி வரை வேறு எந்தப் படமும் திரைக்கு வராததைத் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ கடுமையான ஒப்பந்தங்களின் மூலம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றதுபோல் ஆதிக்கம் செலுத்தினால் திரையரங்க உரிமையாளர்கள் எப்படி பிழைப்பார்கள்? என்பதே அவருடைய கேள்வி. இதற்கு லலித் குமார், “நாங்கள் சில திரையரங்குகளுக்கு மட்டுமே 80 சதவீத பங்கீட்டுத் தொகையை ஒப்பந்தமாகப் போட்டோம். சுப்ரமணியம் ஏன் இப்படி அவதூறுகளைப் பரப்புகிறார் எனத் தெரியவில்லை” என்கிறார்.

முக்கியமாக, இணைய வாயிலாக நடைபெறும் டிக்கெட் முன்பதிவுகளுக்கான பங்கீட்டில் நாங்கள் தலையிடவில்லை என்றும் லலித் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் புக் மை ஷோ போன்ற இணையதளங்கள் மூலமே முன்பதிவு செய்யப்படுகின்றன. அத்தளங்கள், ரூ. 32 வரை முன்பதிவுக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதில் பாதித் தொகையை சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்குக் கொடுக்கிறார்கள். இந்த பங்கிலிருந்து நாங்கள் எதையும் கேட்கவில்லையே என்பது லலித்தின் வாதமாக இருக்கிறது. 

மேலும்,  “கோவைப் பகுதி உரிமையை சுப்ரமணியம் கேட்டார். அதைக் கொடுக்காததால்தான் இப்படிப் பேசுகிறாரோ என்னவோ. இப்படத்திற்காக நான் ரூ. 300 கோடிக்கும் மேல் செலவு செய்து தயாரித்து  நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். செலவிற்கான வட்டி, லாபம் எல்லாவற்றையும் கருத்தில்கொண்டுதான் என்னால் முடிவுகளை எடுக்க முடியும்” எனக் கூறியிருக்கிறார் லலித்.

தமிழகத்தில் மட்டும் 900 திரைகளில் மிகப் பெரிய வெளியீட்டைக் கண்டிருக்கிறது லியோ. சுப்ரமணியம் சொல்வதுபோல் லாபமில்லை என்பதை மற்ற திரையரங்க உரிமையாளர்கள் ஏன் கூற முன்வரவில்லை என்பதும் விஜய்யின் மீது ஏன் இத்தனை காழ்ப்பு என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. முதலில் சுப்ரமணியம் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படைக் காரணமே, லலித் குமார் கோயமுத்தூர் பகுதி விநியோக உரிமையை தனக்குக் கொடுக்காமல் மன்னார் என்பவருக்குக் கொடுத்ததால்தான் சுப்ரமணியம் இக்குற்றச்சாட்டுகளை விடாமல் முன்வைக்கிறார் என புதிய சர்ச்சையும் எழுந்தது. 

திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் சுப்ரமணியம்

ஆனால், இதற்கு சுப்ரமணியம் நேர்காணலில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், “காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது லலித் என்னைத் தொடர்புகொண்டு ரூ. 10 கோடி கடனாகக் கேட்டார். லியோ போன்ற படங்களின் தயாரிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் அவருக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தேன். நான் நினைத்திருந்தால், கொடுத்த பணத்திற்கு விலையாக லியோவின் விநியோக உரிமையைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால், எனக்குத் தேவையில்லை என்பதால் அதைச் செய்யவில்லை” எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்தப் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க சென்னையில் கடந்த அக். 27 ஆம் தேதி சுப்ரமணியம் உள்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் லலித்குமாருடன் பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இறுதி நேரத்தில் லலித் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சுப்ரமணியம் நேர்காணல்களில் லியோவையும் லலித் குமாரையும் கடுமையாகத் தாக்கி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. 

தன் செலவுகளுக்கான லாபத்தை விடக் கூடாது என்பதற்காகவே லலித் பங்கீட்டுத் தொகையை உயர்த்தியிருக்கிறார் என்றால், நியாய தர்மங்களைப் பேசும் திருப்பூர் சுப்ரமணியம், ‘மாஸ்டர்’ வெளியீட்டின்போது அவருக்கு சொந்தமான திரையரங்கில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 390 வாங்கியது எந்த விதத்தில் சரி? என ரசிகர்கள் கேட்கிறார்கள். 

தயாரிப்பாளர் - விநியோகிஸ்தர் - திரையரங்க உரிமையாளர்களின் இந்த ஒப்பந்த ஆட்டக் கதைகளில் யார் வில்லன் எனத் தெரியவில்லை. ஆனால், உண்மையில் ரசிகர்களே கோமாளிகளாக / ஏமாளிகளாக இருக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே தமிழகத்தில் பல திரையரங்குகள் முதல் வாரத்தில் லியோவுக்கு ரூ. 190 வரை டிக்கெட் விற்பனையை நிர்ணயம் செய்திருக்கின்றனர்.

மேலும், மல்டிபிளக்ஸ் திரைகளைத் தவிர முதல் காட்சிக்கான டிக்கெட்களை அரசு நிர்ணயித்த விலையில் முன்பதிவு செய்ய முடியவில்லை. காரணம், அந்தக் காட்சிக்கான வருவாயையும் லாபத்தையும் முழுக்க திரையரங்க உரிமையாளர்களை எடுக்கச் சொன்னாராம் லலித்! அதற்காக ஒரு டிக்கெட்டுக்கு இவர்கள் வைத்த தொகை ரூ. 500! யாரோ முதலீடு செய்து இழப்புகளைச் சரி செய்ய, லாபங்களை அள்ளிச் செல்ல ரசிகர்கள் பாக்கெட்டில் பாரத்தை இறக்கினால் எப்படி?

இவ்வளவு குழப்பங்களும் திரைப்படத்தின் ஹீரோவான நடிகர் விஜய்க்குத் தெரியாமல் இருக்குமா என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கிறது. காரணம், லலித்குமாருடன் இணை தயாரிப்பில் இருந்தது ஜெகதீஷ் பழனிச்சாமி. இவர்தான் விஜய்யின் அதிகாரப்பூர்வ ‘அட்மினாக’ அறியப்படுகிறார்.  ஜெகதீஷ் ஒரு தயாரிப்பில் ஈடுபட்டால் அதற்குப் பின் விஜய் இருப்பார் என்பதுதான் சினிமா வட்டாரத்தின் பார்வையாக இருக்கிறது. ரூ. 300 கோடியில் உருவான லியோவுக்கு லலித்தால் மட்டும் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டியிருக்க முடியாது என்றும் விஜய்யின் தயாரிப்பு பங்களிப்பும் இதில் இருந்திருக்கிறது என்றே கூறப்படுகிறது. குறிப்பாக, மாஸ்டரிலும் இதே கூட்டணிதான் இணைந்தது. வெளியே நடக்கும் இந்தக் கலவரக் குரல்களை விஜய் கேட்காமல் இருப்பாரா என்ன?

ஜெகதீஷ், விஜய், லலித் குமார்!
ஜெகதீஷ், விஜய், லலித் குமார்!

எல்லாவற்றையும் விட, விஜய் படத்தைக் கைப்பற்ற உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அரசியல் செய்ததாக எழுந்த சர்ச்சைகள், உதயநிதி விலகிய பின்பும் தொடர்கிறது. திருப்பூர் சுப்ரமணியன் தன் நேர்காணல்களில் மறக்காமல் கூறும் வார்த்தை, “உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் எந்தக் குளறுபடிகளும் நடந்ததில்லை!.”

சரி, லலித் - சுப்ரமணியம் கூறும் கதைகளைக் கேட்டு சினிமாத் துறை பரபரப்பானாலும் லியோவுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள வெற்றி விழா நிகழ்வில் 'கதையின் நாயகனான' விஜய் கூறப் போகிற ‘கதையே’ இப்போதைய எதிர்பார்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com