800 படம் உருவாக காரணமே விஜய் பட இயக்குநர்தான்: முத்தையா முரளிதரன் 

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது வாழ்க்கை மாதிரியே இந்தப்படமும் பல பிரச்னைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். 
800 படம் உருவாக காரணமே விஜய் பட இயக்குநர்தான்: முத்தையா முரளிதரன் 

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஈழப்போர் பிரச்னையில் தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனால், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார். 

800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இப்படத்தில்  மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குகிறார் எம்.எஸ். ஸ்ரீபதி. தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ளன. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் நடந்துவரும் இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. ஜிப்ரன் இசையமைக்க பிரவின் கே.எல். எடிட்டிங் செய்கிறார். 

பட புரமோஷன் நிகழ்ச்சியில் முரளிதரன், “இந்தப்படம் உருவாக காரணமே வெங்கட்பிரபுதான். அவர்தான் முதன்முதலில் உங்களது பயோபிக் எடுக்கலாம் என்றார். வெங்கட்பிரபு இயக்கவிருந்த படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட சில பிரச்னைகளால் கைவிடப்பட்டது. பின்னர் விஜய்சேதுபதி பிரச்னை. அடுத்து கதை எழுதியவர் ஸ்ரீபதியே நடிகரையும் தயாரிப்பாளரையும் கொண்டுவந்து இதை துவங்கினார். இலங்கையில் கடுமையான பொருளாதார பிரச்னைகளுக்கு மத்தியிலும் இந்தப்படம் எடுக்கப்பட்டது. பெட்ரோல், டீசல்கூட கிடைக்காத நிலை. எனது வாழ்க்கை மாதிரியே இந்தப்படமும் பல பிரச்னைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டது” எனக் கூறினார். 

வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் 68வது படத்தினை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com