டைம் மெஷின்.. சில்க்.. விஷாலைக் காப்பாற்றியதா மார்க் ஆண்டனி - திரை விமர்சனம்

டைம் மெஷின்.. சில்க்.. விஷாலைக் காப்பாற்றியதா மார்க் ஆண்டனி - திரை விமர்சனம்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டைம் மெஷின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது மார்க் ஆண்டனி.

1995-ஆம் ஆண்டு சென்னையில் மெக்கானிக்காக இருக்கும் மார்க்(விஷால்) தன் தந்தை ஆண்டனியை வெறுக்கும் மகன். ஆண்டனி இறந்து 20 ஆண்டுகள் கடந்தும் தன் தாயைக் கொன்றதற்காக  அவர் மீது கோபத்திலேயே இருக்கிறார். இறந்த பிரபல ரவுடியான ஆண்டனியின் நெருங்கிய நண்பன் ஜாக்கி பாண்டியன்(எஸ்.ஜே.சூர்யா), மார்க்கை தன் மகன் போலவே வளர்க்கிறார். அதேநேரம், ஜாக்கியின் மகன் தன் அப்பாவைக் கொன்று தான் பெரிய ரவுடியாக வலம் வர வேண்டும் என ஆசைப்படுகிறார். 

ஜாக்கியுடன் இருப்பவர்கள் அனைவரும் கேங்க்ஸ்டர்களாக இருந்தாலும் தனக்கு மெக்கானிக் வேலையே போதும் என ஒதுங்கி வாழும் மார்க், நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குப் பேசக்கூடிய டைம் மெஷின் டெலிபோன் மூலம் தன் தந்தை மார்க் ஆண்டனி மிகவும் நல்லவர் என்பதை அறிகிறான். இதனால், அவரைக் கொன்றது, அவர் மேல் தவறான பிம்பத்தை உருவாக்கியது எல்லாம் சொந்த அப்பாவைப்போல நினைத்துக்கொண்டிருந்த ஜாக்கிதான் என்கிற உண்மையும் தெரிய வருகிறது. 

இதனை அறிந்துகொண்ட ஜாக்கி பாண்டியன், மார்க்கைக் கொல்ல முடிவு செய்கிறார். உடனே, டைம் மெஷின் டெலிபோன் மூலம் 1975-ல் வாழும் ஆண்டனிக்கு தொடர்பு கொண்டு, “இன்னும் சில மணிநேரங்களில் உங்களைக் கொலை செய்துவிடுவார்கள் எப்படியாவது தப்பித்து விடுங்கள்” என  மார்க்  எச்சரிக்கிறான். ஆண்டனி கொலை செய்யப்பட்டாரா? ஜாக்கி பாண்டியனின் திட்டங்கள் என்ன ஆனது? மார்க்கும் ஆண்டனியும் இணைந்தார்களா? என்கிற அடுத்தடுத்த கேள்விகளுக்கு 20 ஆண்டுகளை முன்பும் பின்புமாக நகர்த்திய திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கு டைம் மிஷின் பாணியிலான கதை புதிது இல்லை என்றாலும், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு கதாபாத்திரங்களை செல்ல விடமால் அவர்களை பேச மட்டுமே வைத்து வித்தியாசமான பாணியைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இரண்டு விஷால், இரண்டு எஸ்.ஜே.சூர்யா, இரண்டு காலகட்டங்கள் என சிக்கலான கதையில் இயன்றவரை ரசிகர்களைப் பெரிதும் குழப்பாமல் திரைக்கதையில் வேலை செய்திருக்கிறார். முக்கியமாக, டைம் மிஷின் கதை என்பதால் லாஜிக் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றாலும் பெரிதாக எல்லை மீறாமல் முடிந்த வரை நேர்மையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

நடிகர் விஷாலுக்கு நீண்ட நாள்களுக்குப் பின் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதற்கு சரியான தேர்வாக அவர் பங்களிப்பு செய்திருக்கிறார். குறிப்பாக, ஆண்டனி விஷாலின் தோற்றம் ரசிக்க வைக்கிறது. ஜாக்கி பாண்டியனாக வேறு யார் நடித்திருந்தாலும் இப்படத்தின் தாக்கம் நிச்சயம் குறைந்திருக்கலாம். அந்த அளவிற்கு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். 

டைட்டில் கார்டில் ‘நடிப்பு அரக்கன்’ என்கிற பட்டத்தோடு ஆரம்பமாகும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படத்தின் இறுதிவரை ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. தந்தையும் மகனுமாக எஸ்.ஜே.சூர்யா டெலிபோனில் பேசும் காட்சிகளில் உடல்மொழியிலும் சிரிக்க வைக்கிறார். முக்கியமாக, ஏஐ(AI) தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை திரைக்குக் கொண்டு வந்த காட்சியில் இடம்பெற்ற எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்படும். தனக்கு வழங்கப்பட்ட பட்டத்திற்கு ஏற்ற ஆள்!

முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுனில், இப்படத்தின் மூலம் மேலும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைய வாய்ப்பு அதிகம். அதேபோல், செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், கிங்க்ஸ்லி ஆகியோரும் தங்களுக்கான பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மார்க் ஆண்டனிக்கு இன்னொரு பலம். ஆனால், பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. அதில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருந்தால் படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக இருந்திருக்கும்.

ஒளிப்பதிவாளர்கள் அபிநந்தன், ராமானுஜம் ஆகியோரின் உழைப்பு காட்சிக்குக் காட்சி தெரிகிறது. குறிப்பாக, சண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம் சிறப்பு. கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன், எடிட்டர் விஜய் வேலுக்குட்டி போன்றோரின் திறமையான பணிகளால் படத்தின் தரம் கூடியிருக்கிறது.

சண்டைப் பயிற்சியாளர்களின் சண்டைக்காட்சிகள் பெரிதும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்குப் பின்பான பேருந்து சண்டைக்காட்சியும் கிளைமேக்ஸ் காட்சியும் அட்டகாசமாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதை வேகம் கதையைக் காப்பாற்றினாலும் பாடல்கள், தேவையற்ற வசனங்கள், படத்தின் நீளம் ஆகியவை நன்றாக வந்திருக்க வேண்டிய சில காட்சிகளைக் கெடுக்கிறது.

நல்ல காட்சி வருமா என முதல்பாகத்தில் நெளிய வைக்கிறார்கள். தன் முந்தைய படங்களைப் போல் இதிலும் சில காட்சிகளில் பெண்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, ஒய்.ஜி.மகேந்திரனின் கதாபாத்திரம் நெருடலைத் தருகிறது. இவற்றை தவிர்த்துப் பார்த்தால் மார்க் ஆண்டனியை  ரசிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com