அடுத்த தலைமுறையையும் விழுங்கிக் கொண்டிருக்கும் சாதி: நான்குனேரி சம்பவத்திற்கு பா.ரஞ்சித் கண்டனம்!

திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் நான்குனேரி சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 
அடுத்த தலைமுறையையும் விழுங்கிக் கொண்டிருக்கும் சாதி: நான்குனேரி சம்பவத்திற்கு பா.ரஞ்சித் கண்டனம்!

நான்குனேரி பெருந்தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சின்னத்துரை (17). இவா் வள்ளியூா் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். இவரை, அதே ஊரைச் சோ்ந்த சக மாணவா்கள் சிலா் கேலி, கிண்டல் செய்து வந்தனராம். இதுகுறித்து, அந்த மாணவா், தலைமையாசிரியரிடம் புகாா் தெரிவித்தாராம். அதனால் மாணவரை வீடு புகுந்து தாக்கியுள்ளார்கள். 

இது தொடா்பாக நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜூ தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி நான்குனேரி, தென்னிமலை, நெடுங்குளத்தைச் சோ்ந்த பிளஸ்- 2 மாணவா்களான 17 வயதுடைய 4 போ், 2 சிறாா்கள் என 6 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, திருநெல்வேலி சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். 

இந்தச் சம்பவத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ், மோகன் ஜி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனது படங்களின் மூலமாக சமூக நீதியை வலியிறுத்தும் இயக்குநர் பா.ரஞ்சித் இந்தச் சம்பவத்திற்கு மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

“சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே” நான்குனேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கிக் கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்! எனக் கூறியுள்ளார். 

இவர் இயக்கியுள்ள தங்கலான் படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com