கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இணைந்து டிரைலர் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் பிரபாஸின் 24வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. காந்தாரா நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் சலார் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்கள்.
படத்தில் கிராபிக்ஸைவிட நிஜமாகவே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
முதல் வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்தாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிரசாந்த நீல், “பலரும் பாசிட்டிவாகவும் (நேர்மறையாகவும்) நெகட்டிவாகவும் (எதிர்மறையாகவும்) விமர்சித்து வருகின்றனர். சிலர் படத்தினை புரிந்து கொள்ள கடினமாக இருந்ததாகவும் கூறினார்கள். நான் 6 மணி நேர படத்தில் 3 மணி நேரம் மட்டுமே எடுத்துள்ளேன். இன்னும் பாதி படம் மீதமிருக்கிறது. அதையும் சேர்த்து பார்த்தால் படம் புரியும். இந்த விமர்சனங்களால் நான் 2வது பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. எனக்கு இந்த கதைக்கு இப்படி சொன்னால்தான் பிடிக்கும் அதனால் அப்படி சொல்கிறேன்.
படம் மக்களுக்கு பிடித்துள்ளது. அதனால்தான் ரூ.500 கோடி வசூலித்துள்ளது. எனக்கு இந்த வசூல் பற்றிய கவலையில்லை. ஆயினும் அதற்காகதான் படம் எடுக்கிறோம். சில நேரங்களில் படம் உடனேயே மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றில்லை. காலம் கடந்தும் பிடிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.