கல்வி உரிமையை பேசும் காலேஜ் ரோடு: திரைவிமர்சனம்

கல்வி உரிமையின் அவசியத்தை பரபரப்பான திரைக்கதையில் கடத்தி கவனம் பெற்றுள்ளது காலேஜ் ரோடு.
கல்வி உரிமையை பேசும் காலேஜ் ரோடு: திரைவிமர்சனம்

எம்பி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. நடிகர் லிங்கேஷ் நாயகனாக அறிமுகமாகியுள்ள இத்திரைப்படத்தில் அவருடன் மோனிகா, பொம்முலேஷ்மி, நாடோடி ம்பரணி, மெட்ராஸ் வினோத், பாலா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல் என பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு  ஆப்ரோ இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கல்வி உரிமையின் அவசியத்தை பரபரப்பான திரைக்கதையில் கடத்தி கவனம் பெற்றுள்ளது காலேஜ் ரோடு. மிகச்சிறிய பட்ஜெட்டில் பேச வந்த கதையை தொய்வின்றி பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஜெய் அமர்சிங். 

சென்னையின் பிரபலமான கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாக சேரும் லிங்கேஷ் அங்கு வங்கியின் பாதுகாப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையிலான மென்பொருளை கண்டுபிடிக்கிறார். இதற்கு மத்தியில் அருகில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளை நடக்கிறது. இதற்கான விசாரணையும், நடிகர் லிங்கேஷும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிதான் காலேஜ் ரோடு. விறுவிறுப்பான திரைக்கதைக்குள் கல்விக்கடன், கல்வி ஏன் நம் உரிமை என்பதையெல்லாம் பேசியிருக்கிறது இத்திரைப்படம். 

துணைக் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்துவந்து லிங்கேஷ் இத்திரைப்படத்தில் நாயகனுக்குண்டான பொறுப்பை சிறப்பாக செய்திருக்கிறார். கல்லூரி திரைப்படத்தில் நாயகனாக வேண்டிய இவர் கால தாமதமாக அறிமுகமானலும் சிறப்பாகவே அதனை பயன்படுத்திக் கொண்டுள்ளார். நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படத்திற்கு கைகொடுத்துள்ளன. லிங்கேஷின் நண்பர்கள் வரும் காட்சிகள் எல்லாம் கல்லூரி காலத்தை நினைவுபடுத்துகின்றன.

கல்லூரி காட்சிகளை பார்வையாளர்களுக்கு நன்றாகவே கடத்தியிருக்கின்றன ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியத்தின் கேமரா கண்கள். பிளாஷ்பேக் காட்சிகளுக்கு பின்னணி இசை கைகொடுத்துள்ளது. சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் அவை பெரிய சிக்கலாக இருக்கவில்லை.

கல்வி ஏழை மக்களுக்கு கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது எனப் பேசும் முக்கியமான கருத்திற்காகவே காலேஜ் ரோட்டைப் பாராட்டலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com