
சிகிச்சை எடுத்துக் கொண்டதால் அழகு குறைந்துவிட்டதாக பதிவிட்டவருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வீட்டில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதன் காரணமாக தற்காலிகமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் சமந்தா, நடித்து முடித்து திரைக்கு வரவுள்ள படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகளில் மட்டும் அவ்வப்போது ஈடுபட்டுள்ளார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழியில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
இதையும் படிக்க | கோல்டன் குளோப் விருதை வென்றது ‘நாட்டுக் கூத்து’ பாடல்
அந்த நிகழ்வில் பேசிய சமந்தா உணர்ச்சிவசப்பட்டு அழுத புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டர் பக்கத்தில், ‘சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டது, இதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று கேலி செய்து பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த சமந்தா, ‘நான் மாதக்கணக்கில் மருந்துகளும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வது போன்ற நிலை உங்களுக்கும் வந்து விடக்கூடாது என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் அழகு பிரகாசமாக இருக்க என்னுடைய அன்பை தருகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், கேலி செய்தவருக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
I pray you never have to go through months of treatment and medication like I did ..
And here’s some love from me to add to your glow