
அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மம்மூட்டி முதன்மை வேடத்தில் நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். இதில் மறைந்த நடிகர் பூ ராமு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை மம்மூட்டி கம்பெனி நிறுவனமும் ஆமென் மூவி மோனஸ்டெரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜன.19 ஆம் தேதி இப்படம் மலையாளத்தில் வெளியானது. தமிழில் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை.
“பிரத்யேகமான சிங்கிங் சவுண்ட் (லிப் சிங்) தொழில்நுட்பத்தின் மூலமாக படமாக்கியிருந்தாலும் தமிழில் சில பகுதிகளுக்கு மீண்டும் டப்பிங் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பினை மறக்கமுடியாது. வேலை செய்தோம் என்ற நினைப்பே இல்லை” எனவும் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இந்தப் படம் ரூ.93 இலட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இந்த வாரத்தில் ஜன.26ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.