எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் மதுமிதா முத்தக் காட்சிகளில் நடித்துள்ள தொடரின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு
வருகிறது.
சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு எதிநீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடருக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
குறிப்பாக ஜனனி கதாபாத்திரத்தில் தொடரின் நாயகியாக நடிக்கும் மதுமிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிர்நீச்சல் தொடரில் இவரின் நடிப்பு பொருத்தமானதாக இருப்பதாக ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.
ஜனனி மற்றும் அவரின் கணவர் சக்தி உடனான காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜனனியும் சக்தியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சவால்களை எதிர்கொள்வது, துன்பங்களைக் கடப்பது என நடிப்பை கச்சிதமாக வழங்குவார்கள். இந்த எல்லா காட்சிகளிலும் நூழிலைபோன்று காதலை இருவரும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
எதிர்நீச்சல் தொடரில் தான் சொந்த காலில் நிற்கும் பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது ஜனனி பாத்திரம். இதனாலேயே ஜனனி பாத்திரத்தின் மீது பலருக்கு பெரும் மரியாதை உண்டு.
இதனிடையே நடிகை மதுமிதா தெலுங்கு தொடரில் முத்தக் காட்சிகளில் நடித்த விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. எதிர்நீச்சல் ஜனனியா முத்தக் காட்சியில் நடித்தார் என்ற விதத்தில் பலர் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
உண்மையில் எதிர்நீச்சல் தொடரில், ஜனனி என்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிவருகிறார் நடிகை மதுமிதா. அவர் இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த 'நம்பர் ஒன் கோடாலு' தொடரில் இடம்பெற்ற முத்தக் காட்சிகள்தான் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகராக அந்தத் தொடரிலும் மதுமிதா சிறப்பான நடிப்பை அளித்திருந்தார். பலவகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது, ஒரு நடிகரின் திறமையையே பறைசாற்றுகிறது. அந்தவகையில் முத்தக் காட்சில் நடிப்பது தவறு ஒன்றுமில்லை, பலதரப்பட்ட பாத்திரங்களில் நடிப்பது வரவேற்கத்தக்கது என்று சிலர் பாராட்டி வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடரின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை மதுமிதா, அத்தொடரில் நடித்த ஜனனியாகவே பலரின் மனதில் பதிந்துள்ளார் என்பதையே, இது போன்ற பிற பாத்திரங்களில் நடித்த விடியோ விமர்சனத்துக்குள்ளாவதைக் காட்டுகிறது.