இது அவதூறு: பெண் தொழிலதிபர் மீது கோபி நயினார் புகார்

தன் மீது அளிக்கப்பட்ட மோசடி புகார் அவதூறு என இயக்குநர் கோபி நயினார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது அவதூறு: பெண் தொழிலதிபர் மீது கோபி நயினார் புகார்

தன் மீது அளிக்கப்பட்ட மோசடி புகார் அவதூறு என இயக்குநர் கோபி நயினார் குற்றம்சாட்டியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அறம். இப்படத்திற்குப் பின் நயன்தாராவின் மீதான கதாநாயகி பிம்பம் மேலும் உயர்ந்தது. 

அதேநேரம், படத்தின் இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைப் பின் நடிகர் ஜெய்யை நாயகனாக வைத்து ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்கினார். ஆனால், இந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சியாமளா யோகராஜா என்கிற பெண் தொழிலதிபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ’இயக்குநர் கோபி நயினார் நடிகர் ஜெய்யை வைத்து ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தை எடுக்கப்போவதாகச் சொன்னார். அதற்காக, என்னை இப்படத்தில் முதலீடு செய்யவும் படத்தில் கிடைக்கிற லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் சொன்னார். நானும் நம்பி ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தேன். படத்தின் பூஜைக்குப்பின் நான் சென்னையிலிருந்து பிரான்ஸ்க்குக் கிளம்பிச் சென்றேன். நீண்ட நாள்களாக, படத்தின் பணிகள் குறித்து புதிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால் படக்குழுவை விசாரித்ததில் படத்தை கைவிட்டதாகச் சொன்னார்கள். இவர்களை நம்பித்தான் பணத்தை முதலீடு செய்தேன். என் பணம் எனக்கு திரும்ப வேண்டும். கோபி நயினார் உள்பட படத்தயாரிப்பில் தொடர்புள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டித்தரக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து,  சென்னை காவல் ஆணையர் அலுவலம் சென்ற கோபி நயினார் அவர் தரப்பில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், ‘ கருப்பர் நகரம் படம் நான்கு தயாரிப்பாளர்களிடம் கைமாறியுள்ளது. அவர்கள் யாரிடம் பணம் பெற்றார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. இணை தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ்தான் எனக்கு சியாமளா யோகராஜாவை அறிமுகம் செய்து வைத்தார். சந்திப்பின்போது சியாமளா, தன் தம்பியை நான் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின், அவருக்கும் எனக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அவர் அளித்த புகார் உண்மையல்ல. வேண்டுமென்றே என் பெயருக்கு களங்கம் விளைவிக்க அவதூறு செய்கிறார். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com