லவ் ஜிகாத்.. ஐஎஸ்ஐஎஸ்.. தி கேரளா ஸ்டோரியின் அரசியல்!

பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
லவ் ஜிகாத்.. ஐஎஸ்ஐஎஸ்.. தி கேரளா ஸ்டோரியின் அரசியல்!
பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற மே 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ஆதா ஷா்மா புா்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சியில், ‘ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன். தற்போது, ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்களின் கதை’ எனக் கூறும் வசனம் இடம்பெற்றிருந்தது. மேலும், புர்க்கா அணிந்தால் பாலியல் சீண்டல்கள் நடைபெறாது என இந்து, கிருஸ்துவப் பெண்களை மூளைச்சலவை செய்யும் காட்சிகளும் இருப்பதால் கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்லாமியர்களிடம் இப்படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. 
இஸ்லாம் சமூகத்தில் நிலவும் அடிப்படைவாதங்களை முன்வைத்து குறிப்பாக பெண் சுதந்திரத்தைப் பேசும் திரைப்படங்களான ‘புர்க்கா அண்டர் மை லிப்ஸ்டிக்’, ‘பிரியாணி’ சமீபத்தில் தமிழில் வெளியான ‘புர்க்கா’ ஆகிய திரைப்படங்களை சில இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்திருந்தன. சமூக வலைதளங்களில் அப்படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. கண்டிக்கும் அளவிற்கு அப்படங்களில் இஸ்லாம் மதம் குறித்து மோசமான சித்தரிப்புகள் எவையும் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 
ஆனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் முற்றிலும் வேறுவகையான கதைக்கருவுடன் தயாராகியுள்ளது. வட கேரளத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முக்கிய மாவட்டங்களான  கோழிக்கோடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்களைக் காதல் திருமணம் செய்துகொண்ட இந்து, கிருஸ்துவ பெண்கள் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் கூறுகிறார். 
குறிப்பாக, இவை காதல் திருமணம் என்கிற பெயரில் நடைபெற்று மதம்மாறிய அப்பெண்களில் சிலரை கட்டாயமாக சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்வதுபோல் கொண்டு செல்கிறார்கள். பின், அப்பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களிடம் விற்கப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதை டிரைலரில் தெரிவிக்கின்றனர். மிகமுக்கியமாக இஸ்லாமிய ஆய்வு மையம் (இஸ்லாமிக் ஸ்டடி சென்டர்) ஒன்றில் அப்பாவிப் பெண்களை இந்த வலையில் சிக்க வைக்கப்பதற்கான திட்டத்தைத் தீட்டுகின்றனர்.
இங்குதான் இஸ்லாமிய இயக்கங்கள் என்றில்லாமல் அனைத்து தரப்பு அரசியல் இயக்கங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக இஸ்லாம் குறித்து வெறுப்புணர்வைத் தூண்டும் வசனங்களும் காட்சிகளும் கேரளம் போன்ற கருத்து சுதந்திரமான மாநிலத்திலேயே படத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற குரல்களை அதிகரிக்க செய்துள்ளன. இப்படம் வெளியானால் தமிழகத்திலும் சர்ச்சை வெடிக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வலுக்கும் கண்டனங்கள்:
முன் சொன்னதுபோல், இப்படம் வெறுப்புணர்வைத் தூண்டுவதால் இதைத் தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு ’வெறுக்கத்தக்க பேச்சுகள் இதில் உள்ளன. ஆனால், சென்சார் போர்ட் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால், இப்படத்திற்கு தடை விதிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சங் பரிவார்களின்(ஆர்எஸ்எஸ்) பிரச்சாரம் என படக்குழுவினரைக் கடுமையாக சாடியுள்ளார். கேரளத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரனா சசி தரூரும் ‘இது உங்கள் கேரளத்தின் கதையா இருக்கலாம். எங்கள் கேரளத்தின் கதையல்ல’ என தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். மேலும், பல இஸ்லாமிய இயக்கங்கள் 32,000 பெண்கள் பாதிக்கப்பட்டத்தை நிரூபித்தால் இயக்குநருக்கு ரூ.1 கோடி தர தயாராக உள்ளோம் என வெளிப்படையான சவால்களை விடுத்துள்ளன.
இயக்குநர் என்ன சொல்கிறார்?
டைம்ஸ் நௌ இணைய செய்திப்பிரிவிற்கு ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் சுப்திதோ சென் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்  ‘கேரளம் போன்ற படிப்பறிவு மிகுந்த பண்பட்ட சமுதாயத்தைக் கொண்ட மாநிலத்திலிருந்து இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கை நான் எதிர்பார்க்கவில்லை.  இப்படத்தில் என்ன  சொல்லப்பட்டிருக்கிறது எனத் தெரியாமல் தடை விதிக்க வேண்டும் என்கிறார்கள். இதை விட மோசமானது எதுவும் இல்லை. 
நாங்கள் ஏன் பிரச்சார பாணியில் படம் எடுக்க வேண்டும்? இப்படம் பேசுவது கேரளத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்ட 3 பெண்களைக் குறித்துதான். ஒரு பெண் ஆப்கன் சிறையில் இருக்கிறார். இன்னொருவர் பெற்றோர்களால் தனக்கு நீதி பெற்றுக்கொடுக்க முடியாது என தற்கொலை செய்கிறார். மூன்றாவது பெண் பயங்கரவாதிகளின் தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார். இதுதான் எங்கள் படம்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சிரியா, ஏமன், ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளுக்கு பெண்கள் கடத்திச்செல்லப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்தும் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். இதுவும் ஒரு பயங்கரவாத செயல்தான். இந்த தீவிரவாதத்தை எதிர்த்து நாங்கள் படம் எடுத்தால் மக்களுக்கு என்ன பிரச்னை? குறிப்பிட்ட சமூகத்திலிருந்து இப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்புகிறது. நாங்கள் அவர்களுக்கு எதிராக இப்படத்தை எடுக்கவில்லை.
இயக்குநர் சுப்திதோ சென்
இயக்குநர் சுப்திதோ சென்
வடகேரளத்திற்கு சென்று பாருங்கள். பிற மதங்களைச் சேர்ந்த 50,000க்கும் அதிகமான பெண்கள் இஸ்லாமியர்களை காதல் திருமணம் செய்துகொண்டு மதம் மாறியுள்ளதாக நாங்கள் தெரிந்துகொண்டோம். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டனர் என நான் கூறவில்லை. என் படத்திலும் அப்படி சொல்லவில்லை. இப்படி வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள் சிலர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என்பதைத்தான் பேசியிருக்கிறோம்.
சசி தரூர் நம் நாட்டின் மரியாதைக்குரிய அரசியல்வாதி. நாங்கள் அவர்களின் எல்லைக்குள் செல்லவில்லை. இப்படம் எந்த அரசியலையும் பேசவில்லை. எனக்கும் அரசியல் தெரியாது. சினிமாவும் மக்களின் துயரும் தெரியும். இப்படத்திற்காக ஆராய்ச்சி செய்தேன். கதையை என் தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர் ஒப்புக்கொண்டு தயாரிக்க முன்வந்தார். எங்களுடைய 7 ஆண்டு பயணம் இது. படத்திற்கு தடைகோரும் அரசியல் கட்சிகளின் ஆதாயங்கள் என்ன எனத் தெரியவில்லை. நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ‘தயவு செய்து எங்கள் படத்தைப் பாருங்கள்’ என்பதைத்தான் என்கிறார்.
 கடும் சர்ச்சைகள், விமர்சனங்களுக்கு மத்தியில் நாளை மறுநாள் (மே-5) இந்தியா முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது. உண்மையில் கருத்து சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com