தேசிய உரிமைப் பாடலை சிதைத்தாரா? சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தேசிய உரிமைப் பாடலை சிதைத்தாரா? சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான்!

புகழின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்கள் சர்ச்சைகளில் சிக்குவதும் மீள்வதுமாக இருப்பது வேடிக்கைதான் என்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெற்றவரும் இதில் விதிவிலக்கு இல்லை போல.

நல்ல கலைஞராக, அன்பைப் பரப்பும் மனிதராக அனைத்து மதத்தினரிடையேயும் தனக்கான ஆதரவாளர்களை வைத்திருந்த ரஹ்மானுக்கு இது போதாத காலம் போல் இருக்கிறது. 

சென்னையில் அவர் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பல குழப்பங்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்து அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அவர் வாழ்வில் எதிர்கொண்ட மிகக் கசப்பான சம்பவம் இதுவாகவே இருக்கும். 

அந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி ஏ.ஆர்.ரஹ்மான் தங்களிடம் பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, இந்த சர்ச்சைகளின் தீவிரம் அடங்கிய நிலையில், மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரஹ்மான்.

ஹிந்தியில் ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் நேரடியாக பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான பிப்பா என்கிற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் 1971 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, வங்கதேசம் என்கிற புதிய நாடு உருவான கதையாக உருவாகியுள்ளது.

இதில்,  மறைந்த வங்கக் கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய பாடல்களை ரஹ்மான் பயன்படுத்தி உள்ளார்.

1922-ல் தேசிய உரிமைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து எழுதப்பட்ட அவரின் பாடல்கள் இன்றும் மேற்கு வங்கம், வங்க தேசத்தில் மிகப் பிரபலமாகவே இருக்கிறது. 

இந்நிலையில், பிப்பா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசையின் மூலம் கசி நஸ்ருல் இஸ்லாம் பாடல்களை சிதைத்துவிட்டதாக நஸ்ருல்லின் பேரன் கசி அனிர்பன் குற்றம்சாட்டி உள்ளார்.

கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம்
கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம்

இதுகுறித்து அவர் கூறிய போது, “பிப்பா படத்திற்காக என் தாத்தாவின் பாடலான, ‘கரார் ஓய் லஹோ கொபாட்’ ( karar oi louho kopat ) பாடலை மறு உருவாக்கம் செய்ய ரஹ்மான் எங்களை அணுகினார். நாங்கள் அப்பாடலின் மூல டியூனை மாற்றாமல் உபயோகிக்க அனுமதி தந்தோம். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் அவரின் இசையைப் பயன்படுத்தி மூலப்பாடலை சிதைத்து விட்டார். பிப்பா படத்திலிருந்து இப்பாடலை நீக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிப்பா படக்குழு மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால், ரஹ்மான் தரப்பிலிருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com