லலித் குமாருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள்?

லியோ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை ஒப்பந்தத்தால் தயாரிப்பாளர் லலித்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லலித் குமாருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம்  உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது. 

இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.

இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ  அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் திரையரங்க உரிமையாளர்கள் பக்கம் பிரச்னையும் எழுந்துள்ளது. காரணம், லியோ படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம், 80 சதவீத பங்கீட்டு தொகையைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

வெளியீட்டு உரிமையைப் பெற்றவர்கள் வழக்கமாக, திரையரங்க உரிமையாளர்களிடம் 60 அல்லது 70 சதவீதத் தொகையே பங்கீட்டாகக் கொடுக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால், தீபாவளி வரை வேறு எந்தப் படமும் போட்டிக்கு இல்லை என்பதால் லியோவுக்காக அதிக பங்கீட்டு தொகையைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லியோவின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து திருப்பூர் சுப்ரமணியமிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “லலித்குமார் எந்தக் கணக்கை வைத்து இந்த வசூலைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. விடுமுறை நாள்களில் மட்டுமே இப்படத்திற்கு கூட்டம் இருக்கிறது. கரோனாவுக்குப் பின் ஓடிடிக்குச் செல்லாமல் நேரடியாக திரையரங்க வெளியீடாக வந்ததால்தான் மாஸ்டர் படத்திற்கு 80 சதவீதப் பங்கீட்டைக் கொடுத்தோம். தமிழ் சினிமா வரலாற்றில் இந்தளவுக்கு வேறு எந்தப் படத்திற்கும் ஒப்பந்தம் போடவில்லை. ஆனால், லியோவுக்கும் 80 சதவீதம் கேட்டு எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் லியோவைத் திரையிட்டோம். லியோவால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை. லலித் குமார் என்னைத் தொடர்பு கொண்டு உங்கள் இஷ்டத்திற்கு நேர்காணலில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறார். இந்த அளவிற்கு பங்கீட்டு தொகையைக் கேட்டால் வேறு என்ன செய்ய முடியும்?” எனக் கூறியுள்ளார்.

திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ்த் திரையுலகில் முக்கியமானவராக திருப்பூர் சுப்ரமணியம் கருதப்படுகிறார். திரைப்படங்களின் வசூல் நிலவரங்களைப் பற்றி அவர் கூறுபவை கவனிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் தன் படத்தின் வெற்றி, தோல்விகளைப் பற்றி திருப்பூர் சுப்ரமணியத்தை நேரடியாக தொடர்புகொண்டு அவர் சொல்வதைக் கேட்பார் என்கிறார்கள். தற்போது, அவரே லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை வைப்பது சினிமாத் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com