எப்படிடா இருக்க..? யாரைச் சொன்னார் விஜய்?

விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற காட்சி பேசுபொருளாகியிருக்கிறது.
எப்படிடா இருக்க..? யாரைச் சொன்னார் விஜய்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம்  உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது. 

இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.

இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ  அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், லியோ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி பேசுபொருளாயிருக்கிறது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், சண்டைக்காட்சிக்குப் பின் தான் யார் என்பதைக் கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்திருப்பார். அப்போது, அவரை நெருங்கி வரும் கழுகு ஒன்று, விஜய்யை உற்றுப்பார்க்கிறது. இதைக் கண்ட லியோ சிகரெட்டைப் பற்ற வைத்து, ‘எப்படிடா இருக்க?’ என அந்தக் கழுகைப் பார்த்துக் கேட்கிறார். கதைப்படி பிளாஷ்பேக் விஜய், அந்தக் கழுகுடன் இருந்திருந்தாலும் இந்த ஒருகாட்சியில் மட்டுமே கழுகை நேருக்கு நேர் சந்திக்கும்படி காட்சிக் கோணங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு முன்பான காட்சியில், “இவ்வளவு பக்கத்துல ஒரு கழுகைப் பார்த்தது இல்ல சார். பயமா இருக்கு” என நக்கலாக விஜய் கூறியிருப்பார்.

இதனைக் கண்ட ரசிகர்கள், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கழுகுக் கதைக்கு விஜய் பதிலடி கொடுத்திருக்கிறார் என தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக, இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்கிற போட்டியும் நிலவி வருவதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ரஜினி அப்படி என்ன சொன்னார்?

“காக்கா எவ்வளவு முயன்றாலும் கழுகை நெருங்க முடியாது. கழுகு பறப்பதைப் பார்க்கும் காகம் அதைத் துரத்தி மேலே சென்று கொத்தும். ஆனால், கழுகு அமைதியாக இன்னும் மேலே செல்லும். மீண்டும் காகம், கழுகை நெருங்கிச் செல்லும். ஒருகட்டத்தில் காகத்திற்கு வேர்த்து விறுவிறுக்கும் அளவிற்கு கழுகு மேலே சென்றுவிடும். அதற்கு மேல் பறக்க முடியாமல் காகம் கீழே வந்துவிடும். நம் வேலையைப் பார்த்துவிட்டு சென்றுகொண்டே இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

அதேநேரம், ரஜினியின் பேச்சுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ் தன் படங்களில் கழுகை ஒரு குறியீடாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com