
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனவும் பேசினார்.
இதைத் தொடர்ந்து, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கூறியதாவது:
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சு பல நூற்றாண்டுகளாக உள்ள சாதிய எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி, பாலினத்தின் பெயரிலான மனிதாபிமானமற்ற செயல்களின் வேர்கள் சனாதனத்தில் உள்ளன.
அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், மகாத்மா பூலே, சாந்த் ரவிதாஸ் போன்ற சீர்திருத்தவாதிகளும் இதையே வலியுறுத்தியுள்ளனர். அமைச்சர் உதயநிதியின் அறிக்கையை திரித்து இனப்படுகொலைக்கான அழைப்பு எனத் தவறாக பயன்படுத்தும் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் உதயநிதி மீது அதிகரித்துவரும் வெறுப்பு தாக்குதல் கவலை அளிக்கிறது.
சமூகநீதி, சமத்துவத்தை உருவாக்க சனாதனதர்மத்தை ஒழிக்க வேண்டுமென கூறிய உதயநிதியின் பேச்சிக்கும் அவருக்கும் ஆதரவளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.