
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது.
இதையும் படிக்க: புதுத் தொழில் துவங்கும் நயன்தாரா!
மேலும், தமிழகத்தைத் தவிர நாட்டின் பிற மாநிலங்களில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.76.85 கோடியும் கர்நாடகத்தில் ரூ.62.9 கோடியையும் கேரளத்தில் ரூ.49.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல். தமிழகத்தில் ஜெயிலர் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காசோலை வழங்கியதுடன் சொகுசுக் கார்களையும் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயத்தையும் பரிசாகக் கொடுத்தார்.
இந்நிலையில், ஜெயிலர் மலேசியாவில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், மலேசியாவில் இதுவரை அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமான ‘தில்வாலே’ படத்தின் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...