இப்போதான் இந்த ஓடிடி எல்லாம்.. கடந்த 64 ஆண்டுகளாக டிடி தான்!

இப்போதான் இந்த ஓடிடி எல்லாம் வந்துவிட்டது. ஆனால், கடந்த 64 ஆண்டுகளாக, தூர்தர்ஷன் எனப்படும் டிடிதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தனது கண்பார்வையில் வைத்திருந்தது.
தூர்தர்ஷன்
தூர்தர்ஷன்


புது தில்லி: இப்போதான் இந்த ஓடிடி எல்லாம் வந்துவிட்டது. ஆனால், கடந்த 64 ஆண்டுகளாக, தூர்தர்ஷன் எனப்படும் டிடிதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தனது கண்பார்வையில் வைத்திருந்தது.

தூர்தர்ஷன் தனது 64 வயதை நிறைவு செய்து, இன்று 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 15 தனது 64 வயது நிறைவைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.

கடந்த 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, தூர்தர்ஷன் சோதனை முறையில், தனது ஒளிபரப்பை செய்தது. இது 1965ஆம் ஆண்டு, டிடி என்ற பெயரில் ஒளிபரப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அப்போது தில்லியில் உள்ள வீடுகளுக்கு தொலைக்காட்சி சேவை கிடைத்தது. முதல் ஒளிபரப்பை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.

பிரசார் பாரதியின் கீழ் இயங்கிய தூர்தர்ஷன், அப்போது, நாட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி அலைவரிசையாக இருந்தது. படிப்படியாக மாநிலங்கள் தோறும் அலுவலகங்கள் அமைத்து, உள்ளூர் மொழிகளிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது.

இப்போது நெடுந்தொடர்களைப் போல ஞாயிறு காலையில் மகாபாரதமும், ராமாயணமும் ஒளிபரப்பாகும். அப்போது தெருக்களில் சந்தடி இருக்காது. எல்லோர் வீடுகளிலும் இந்த தொலைக்காட்சியின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அதுபோல, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாகும். அந்தப் படத்தின் அறிவிப்பை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாக இருப்பார்கள் மக்கள்.

ஒரு வாரத்தில் ஒரே ஒரு முறை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ஒலியும் - ஒளியும் நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த கிராமமே ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி முன் அரை மணி நேரம் முன்னதாக வந்து உட்கார்ந்துவிடும் வழக்கங்கள் 80களின் வரப்பிரசாதம்.

அதிலும், கூடுதலாக ஒரு விளம்பரம் வந்துவிட்டால் வெறும் ஐந்து அல்லது நான்கு பாடலுக்குள் ஒலியும் ஒளியும் முடிந்துவிடும். நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்று கூறினாலும், எழுந்துப்போக மனமில்லாமல் பல பெரியவர்கள் அடுத்த ஒரு பாடலுக்காகக் காத்திருப்பார்கள்.

கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு  வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒரு மாநில மொழித் திரைப்படம் ஒளிபரப்பாகும். அதில் 16 வாரங்களுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்பாகும். அந்த வாரம் தமிழர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போலத்தான். அதுபற்றியே பேசிப்பேசி தீர்ப்பார்கள். அந்த மதிய வேளையில் ஒரு வாரம் மௌன ராகம் படம் ஒளிபரப்பானபோது, மக்களின் ஒட்டுமொத்த பேச்சும் அந்தப் படத்தைப் பற்றியே இருந்ததும் நல்ல நினைவலைகளாக இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது.

இதில், புரியாத மொழிப் படங்களாக இருந்தாலும், கூட்டமாக உட்கார்ந்துகொண்டு படத்தைப் பார்த்தவர்களும் உண்டு. மொழி புரியாவிட்டாலும் படத்தைப் பார்த்து ஓரளவுக்குப் புரிந்துகொள்வார்கள். ஏனென்றால் ஒரே ஒரு பொழுதுபோக்கு அதுதானே.

இன்று ஆயிரம் பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டாலும், ஒரே ஒரு ஒலியும், ஒளியும் நிகழ்ச்சிக்கும், வயலும் வாழ்வும் நிகழ்ச்சியும் கிடைத்த வரவேற்பு எதற்கும் கிடைக்காது.. கிடைக்கப்போவதும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com