
பிவிஆர் திரைகளில் இனிமேல் மலையாளத் திரைப்படங்கள் திரையிடப்படாது என கேரள திரைப்படப் பணியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய சினிமாவில் மலையாள சினிமாக்கள் மிகுந்த கவனம் ஈர்த்து வருகின்றன. சமீபத்திய மலையாள படங்களான பிரேமலு, மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், ஆடுஜீவிதம் ஆகிய படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிவிஆர் திரைகளில் விபிஎஃப் எனப்படும் விர்சுவல் பிரிண்ட் ஃபீ என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்முறையாக படத்தினை வெளியிடுபவர்கள் டிஜிட்டல் சினிமா புரஜக்டரை அமைக்க பணம் தரவேண்டும் என்ற நடைமுறைக்குதான் விபிஎஃப் என்று பெயர். இதனால் பெரும்பாலான மலையாள சினிமாக்கள் பாதிக்கப்படுகின்றன.
கேரள திரைப்படப் பணியாளர்கள் கூட்டமைப்பின் (எஃபிஎஃப்கேஏ) செயலாளர் உன்னிகிருஷ்ணன் பி செய்தியாளர்கள் சந்திப்பில், “விபிஎஃப் கட்டணங்கள் குறைக்கும்வரை இனிமேல் பிவிஆர் திரைகளுக்கு மலையாளப் படங்களை திரையிட அனுமதி அளிக்க மாட்டோம். இது மலையாளப் படங்களுக்கு எதிராக மட்டுமே செய்கிறார்கள். வேறெந்த தென்னிந்தியப் படங்களுக்கும் இதுமாதிரி செய்வதில்லை. அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான வினீத் ஸ்ரீனிவாசன், “இது தயாரிப்பாளர்களுக்கான பிரச்னை மட்டுமில்லை; மலையாள சினிமாவில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களையும் இது பாதிக்கும்” எனக் கூறியுள்ளார்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார் ஆடு ஜீவிதம் தயாரிப்பாளரும் இயக்குநருமான பிளெஸ்ஸி.
இதனால்தான் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகியுள்ள ஆவேஷம் திரைப்படம் பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.