ஃபகத் ஃபாசிலின் விருந்து: ஆவேஷம் - திரை விமர்சனம்!

நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆவேஷம் படத்தின் திரை விமர்சனம்.
ஃபகத் ஃபாசிலின் விருந்து: ஆவேஷம் - திரை விமர்சனம்!

ரோமன்சம் பட இயக்குநரின் புதிய படம்தான் ஆவேஷம். அஜு, பிபி, ஷாந்தன் எனும் 3 பேர் கேரளத்திலிருந்து பெங்களூருவுக்கு பொறியியல் படிப்பு படிக்கச் செல்கிறார்கள். அங்கு கல்லூரியில் நடக்கும் அட்மிஷன், விடுதி பேரங்கள் எல்லாமே நம்மைப் படத்திற்குள் உள்ளிழுத்து செல்கின்றன.

அந்த கல்லூரியில் சீனியர்கள் இவர்களை ரேகிங் (கேலிவதை) செய்கிறார்கள். அடித்து உதைக்கிறார்கள். அதற்காக அந்த சீனியர்களை உடனடியாக பழிவாங்க வேண்டுமென நினைத்து உள்ளூர் ரௌடியைத் தேடிப் போகிறார்கள். அவர்கள் சென்றடையும் ரௌடிதான் ஃபகத் ஃபாசில். பின்னர் என்னென்ன நடக்கும் என்பதே கதைக்களம்.

அஜு கதாபாத்திரம்தான் இந்த கதையை முன்னகர்த்தி செல்லும். அவரது உத்வேகமான பேச்சுகள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் ஒரு ஆணின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. கெத்து என்று சொல்லும் பண்பு கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமாக நினைக்கப்படுகிறது. இதைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ரேகிங் என்பது மிகவும் தவறான விசயம். அதைக் காட்சிப்படுத்திய விதம் நகைச்சுவையாகவும் இருக்கிறது; வன்முறையாகவும் இருக்கிறது. எல்லாவிதமான சீரியசான காட்சிகளிலும் பார்வையாளர்களோ கைதட்டிச் சிரிக்கிறார்கள். இதுதான் படத்தின் மிகப் பெரிய பலம்.

ஃபகத் பாசில் படத்தில் வரும்வரை சற்று மெதுவாகப் பயணிக்கும் கதை அவர் வந்ததும், மொத்த படத்தையும் அவரே ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

ரௌடிகளை தேடிச் செல்லும் பாணி மிகவும் அற்புதமாக இருந்தது. யார் ரௌடி? உடலில் பருத்து இருப்பவர்களை எல்லாம் தேடிச் செல்கிறார்கள். அவர்கள் குடித்துவிட்டு அழுவது மிகுந்த சிரிப்பைத் தருகிறது. இது ஒருவிதத்தில் பொதுப் புத்தியைக் கிண்டல் செய்யும் விதமாகவே இயக்குநர் கையாண்டிருக்கிறார்.

ஷாந்தன் கதாபாத்திரம் மிகவும் நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கேங் என்று எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக ஒருவன் உடல் பருத்து இருப்பான். அவன்தான் ஷாந்தன். எங்குமே போராடாமல் வளைந்து கொடுக்கும் கதாபாத்திரம்.

அம்பன், பிபி, ஃபகத் ஃபாசில் (ரங்கன்), அஜு, ஷாந்தன்.
அம்பன், பிபி, ஃபகத் ஃபாசில் (ரங்கன்), அஜு, ஷாந்தன்.

ஃபகத் பாசிலின் கதாபாத்திரம் மிகுந்த வேடிக்கையாக ஒரு காமிக்கல் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கேங்ஸ்டர் இப்படியெல்லாமா செய்வார் என்று பார்வையாளர்கள் யோசிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.

அடிதடி செய்யாத கேங்ஸ்டர் என்பதைக் கேட்க அவ்வளவாக நம்பிக்கை இல்லையென முதலில் தோன்றினாலும் அதனை நியாயப்படுத்தும் காட்சிகளைப் படம் முழுவதும் அங்கங்கு வைத்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர் ஜித்து மாதவன். கலையின் மேதைமையே ஒன்றை நிஜமென நம்பவைத்தலில்தானே இருக்கிறது.

நகைச்சுவை, கோபம் இரண்டும் எதிரெதிர் துருவங்கள். இரண்டையும் சேர்த்துத் தருவது மிகவும் கடினமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் இரண்டுமே மோசமான விமர்சனத்துக்குள்ளாகிவிடும். இயக்குநரும் இதனை சரியாக கையாண்டிருக்கிறார்.

பிபி கதாபாத்திரம்தான் ஃபகத் ஃபாசிலுக்கு பிடித்த கதாபாத்திரம். அதற்கும் ஃபகத் ஃபாசிலுக்கும் தொடர்பிருக்கிறது. பிபி கதாபாத்திரத்தில் நடித்தவரிடம் ஒரு ஸ்டைல் இருக்கிறது. அஜு, பிபி, ஷாந்தன் என இந்த மூவருமே படம் முழுவதும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஃபகத் ஃபாசில் தனது கண்களிலே கோபத்தினை கடத்திவிடுகிறார். கேஜிஎஃப் படத்தின் அம்மா சென்டிமென்ட்டை கிண்டலடித்தாலும் படத்தில் அதுதான் முக்கியமான கருவாகவும் இருக்கிறது.

ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் ஏன் அப்படி இருக்கின்றன என்ற முழுமையான சித்திரம் நமக்குப் படம் முடியும்போதுதான் புரியும். அவரது தனிமை, ஏக்கம் என்பதை பெரிதாகக் கொண்டாடிக் கொண்டிராமல் அதில் இருக்கும் முட்டாள்தனங்களை நகைச்சுவையுடன் கூறியிருப்பதுதான் படத்தின் பலமாக அமைகிறது.

படத்தில் இசை பெரிதாக கவரவில்லையானாலும் படத்தினை பாதிக்காமல் ஆடல், பாடல், நகைச்சுவை, த்ரில்லர் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் சரியாகக் கடத்த உதவுகிறது. படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடக்கின்றன. அதனை படம் பிடித்த விதம் அருமையாக இருக்கிறது.

மன்சூர் அலிகான் சிறிய கேமியோவாக வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். ஃபகத் ஃபாசிலுடன் இருக்கும் ரௌடிகளில் அம்பன் கதாபாத்திரம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் சில இடங்களில் ஃபகத் ஃபாசிலையே அவர் முந்துகிறார்.

படம் பெங்களூருவில் அமைவதால் கன்னடம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கன்னடம் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் நெருக்கமாகவும் மற்றவர்களுக்கு அந்நியமாகவும் அமையலாம். ஆனால், வசனங்கள் வரிகளாக வருகின்றன. முதல் பாதியின் முதல் 15 நிமிடங்கள் பொறுமையாக செல்வதும் ட்விஸ்ட் என்று பெரிதாக எதுவுமே இல்லாமல் இருப்பதாலும் சிலருக்கு ஒருவேளை படம் பிடிக்காமல் போகலாம். ஆனால் ஃபகத் ஃபாசிலின் புதிரான கதாபாத்திரம் அந்த வெற்றிடத்தை திரில்லராக மாற்றுகிறது.

ஃபகத் ஃபாசிலுக்குத் தேசிய விருது கிடைக்குமென எல்லா படங்களுக்கும் எதிர்பார்ப்பதுபோல இதிலும் மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இதில் மற்ற படங்களைவிடவும் இறங்கி செய்திருக்கும் அவரது நகைச்சுவைகள், நடனம், பாசம், கோமாளித்தனம், அடிதடி என இது ஒரு ஃபகத் ஃபாசிலின் முழு விருந்து என்றே சொல்லலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com