என் காலை அகற்ற வேண்டிய நிலை... சினிமா அனுபவங்களைப் பகிர்ந்த விக்ரம்!
நடிகர் விக்ரம், நடிகனாக வேண்டும் என்பதற்காக எதிர்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஆக.5) நடைபெற்றது. இதில், விக்ரம் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் தன் சினிமா அனுபவங்கள் குறித்து பேசினார். அதில், “பள்ளியில் படிக்கும்போது எட்டாம் வகுப்பு வரை முதல் 3 ரேங்க் வாங்கும் மாணவர்களில் ஒருவனாக இருந்தேன். அதன்பின், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்ததால் படிப்பில் கவனம் இல்லாமல்போனது. எப்போதும், நடிப்பைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பேன். கல்லூரியில் படித்தபோது முதல்முறையாக நாடகம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து விருது பெற்றேன்.
ஆனால், அப்போது ஒரு விபத்தில் என் கால் உடைந்தது. மருத்துவர்கள் காலை அகற்ற வேண்டும் என்றனர். என் அம்மா எப்போது சரியாகும் என மருத்துவரிடம் கேட்டார். அதற்கு, இனிமேல் நான் நடக்க மாட்டேன் என்றார். 23 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் மருத்துமனையில் படுக்கையில் இருந்தேன். அதன்பின், ஓராண்டு நடைக்குச்சி (வாக்கிங் ஸ்டிக்) உதவியுடனே நடந்தேன். ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய் என பலரும் கேட்டனர். எனக்கு கதாநாயகனாக வேண்டாம், சிறிய கதாபாத்திரம் கிடைத்தாலும் போதும் என்கிற வெறியில் கிறுக்கன்போல் இருந்தேன்.
அப்படியான சூழலில், பட வாய்ப்புகள் வந்தாலும் அவையும் தோல்விப்படங்களாயின. மீண்டும் கடின உழைப்பைச் செலுத்தி தொடர்ந்து, முயற்சிமேல் முயற்சி செய்ததால்தான் இன்று உங்கள் முன்பு இந்த மேடையில் இருக்கிறேன். நாம் ஒன்றை ஆசைப்பட்டு அதற்காக உழைத்தால் நிச்சயம் அதை அடைவோம். ஒருவேளை நான் வெற்றிபெறாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? இன்றும் அதற்காக முயற்சி செய்திருப்பேன். அந்தளவிற்கு நான் சினிமாவை நேசிக்கிறேன்” எனக் கூறினார்.
நடிகர் விக்ரமின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.