விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடர் இந்த ஆண்டின் சிறந்த தொடராகத் தேர்வாகியுள்ளது.
சினிமாக்களில் சிறந்த நாயகன், நாயகி விருது பெரிதும் எதிர்பார்க்கப்படுவதைப் போல, சின்னத்திரையிலும் சிறந்த நாயகன், நாயகி விருது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையும் சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன், நாயகியே பெற்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகிறது.
இத்தொடரில், கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத எஸ். குமரன் இயக்குகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பன திருமதி செல்வம் தொடரை இயக்கியவர்.
தற்போது சிறகடிக்க ஆசை தொடரை இயக்கி வருகிறார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த, கோயில் வாசலில் பூ விற்றுவரும் நாயகி, குடிப்பழக்கம் கொண்ட ஓட்டுநரை (நாயகன்) எதிர்பாராத விதமாக திருமணம் செய்துகொள்கிறார். அந்தத் திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, புற அழுத்தங்களை சமாளிப்பதே சிறகடிக்க ஆசை தொடரின் கரு.
அரிதாரம் இல்லாமல் இயல்பான மக்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் வகையில் சிறகடிக்க ஆசை தொடரின் முதன்மை பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதே இத்தொடரின் இயல்பான வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் இந்த ஆண்டுக்கான சிறந்த தொடராக சிறகடிக்க ஆசை தொடர் தேர்வாகியுள்ளது. இதேபோன்று சிறந்த நாயகியாக நடிகை கோமதி பிரியாவும், சிறந்த நாயகனாக வெற்றி வசந்த்தும் தேர்வாகியுள்ளனர்.
இதோடு மட்டுமின்றி இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகை, துணை நடிகர், சிறந்த மாமியார், சிறந்த மாமனார் ஆகிய விருதுகளையும் சிறகடிக்க ஆசை தொடரே வென்றுள்ளது.
மக்கள் மனங்களை வென்ற தொடர் தற்போது விருதுகளையும் வென்றுள்ளதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் பெரிதாக அறிமுகமில்லாமல், புதுமுக நாயகன், நாயகியே இத்தொடரில் நடிக்கின்றனர். பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகைகள் நடிப்பதை விட, கதை நன்றாக இருந்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு சான்றாய் மாறியுள்ளது சிறகடிக்க ஆசை தொடர் என்பதே சின்னத்திரை ரசிகர்கள் கருத்தாக உள்ளது.