நடிகர் விக்ரம் தன் ரசிகர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அதற்கான, புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புரோமோஷனில் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் மதுரையில் ரசிகர்களைச் சந்தித்தனர்.
அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், “நடிகர்கள் அஜித், சூர்யா அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இல்லையே” என விக்ரமிடம் நேரடியாகக் கேட்டார்.
இதைக் கேட்ட விக்ரம், “என் ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. திரையரங்கில் வந்து பாருங்கள். எல்லா ரசிகர்களும் என் ரசிகர்கள்தான். நானும் தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களைக் கொடுத்தவன்தான். எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆனால், சினிமாவின் தரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நிறைய முயற்சிகள் செய்தேன். அந்த உழைப்பே தங்கலான் மற்றும் வீர தீர சூரனாக உருமாறியிருக்கிறது. முதல் மூன்று இடங்களில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை.” எனக் கூறினார். இதைக்கேட்ட விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.