
நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் நாயகியாக நடிக்கிறார்.
திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ளும் வேகத்தை வைத்தே அதிர்ஷ்டம் தேடி வரும் எனச் சொல்வார்கள். மற்ற துறைகளில் எப்படியோ... சினிமாவில் நடந்துகொண்டே இருக்கிறது. இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பட்ஜெட்களின் நாயகன் எனப் பெயரெடுத்த நடிகர் பிரபாஸுக்கு, ஜோடியாக நடிக்க கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை பல நடிகைகள் காத்துக் கிடக்கின்றனர்.
அப்படி, ஒரு வரிசை இருக்கும்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. பெயர் இமான்வி (இமான் இஸ்மாயில்). இன்ஸ்டாகிராமில் நடனமாடி தனக்கென ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர். இவரது பல காணொலி துணுக்குகள் இணையத்தில் உலவிக்கொண்டே இருக்கின்றன.
அழகான, துடுக்கான ஆள். கல்கி படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு பிரபாஸின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது, சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பில் சினிமா ரசிகர்களின் விழி உயர்ந்திருக்கிறது. காரணம், பிரபாஸ் அல்ல. படத்தின் கதைநாயகியாக இமான்வி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக ஆடி பலரைக் கவர்ந்தவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நடிகையாக, இதுவே அவருக்கு முதல் படமும்கூட. ரூ.1000 கோடிகளைக் குவிக்கும் நட்சத்திர நடிகருக்கு ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜோடியாவது சாதாரண விசயமா?
சீதா ராமம் படத்தின் மூலம் நடிகை மிருணாள் தாக்கூரை இந்தியாவின் அழகு தேவதை அளவுக்கு கொண்டாட வைத்த இயக்குநர் ஹனு ராகவபுடி, இமான்வியையும் ஸ்டாராக ஜொலிக்கவிடுவாரா? பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.