நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில் அதிர்வைக் கிளப்ப, உடனே நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தில் (அம்மா) பொறுப்பு வகித்த பொதுச்செயலர் பதிவியை ராஜிநாமா செய்தார். அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், இன்று நடிகை மினு முனீர் பல முன்னணி நடிகர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, 2013 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது, நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜு, இடவேல பாபு உள்ளிட்டோர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் இந்த தொடர் தொல்லைகளால் மலையாள சினிமாவிலிருந்து வெளியேறி சென்னையில் குடியேறிவிட்டதையும் பதிவு செய்துள்ளார்..
மேலும், அப்போது மலையாள நடிகர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினராக இணைய நடிகர் முகேஷை அணுகியபோது, அவர் அம்மாவில் உறுப்பினராக வேண்டுமென்றால் பலருடன் நெருக்கமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இங்கு இடம் கிடைக்காது’ எனக் கூறியதாக மினு குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகரான ஜெயசூர்யா மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் ரேவதி சம்பத், மினு முனீரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இன்னும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல பிரபலங்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.