கங்குவா வெளியீட்டுத் தேதி சர்ச்சையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினி நடிக்கும் படமென்பதால், தமிழகத்தில் ரஜினியின் படத்தை வாங்கவே விநியோகிஸ்தர்கள் முயல்வார்கள். மேலும், இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி என மொழிக்கு ஒரு நட்சத்திர நடிகரை வைத்திருப்பதால் பான் இந்தியளவில் வேட்டையன் படத்தின் வியாபாரமே ஓங்கும்.
அதேநேரம், பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் வெளியானால் இப்படமே பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அக். 31 ஆம் தேதிக்கு மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் மாதம் கங்குவா வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின் அக். 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, மீண்டும் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுவதால், சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால், கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். திட்டமிட்ட தேதிக்கு வெளியிடாமல் ரஜினி படத்தைப் பார்த்து பயப்படுவதா? என தகாத வார்த்தைகளாலும் திட்டி பதிவிட்டு வருகின்றனர்.